தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்தது இஸ்லாமியர்கள்தான் என்று சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இது கிறிஸ்தவர்களால் அமைக்கப்பட்ட அரசு என்று கூறியது பொய்யா என்று கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். அப்போது அவர்க பேசுகையில், “இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. இது இஸ்லாமியர்களுக்கான அரசு. தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே இஸ்லாமியர்கள்தான். ஆகவே, இந்த அரசு இஸ்லாமிய சமூக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இன்னும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளனவோ அவைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார்” என்று கூறியிருக்கிறார்.
இதுதான் கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், சபாநாயகர் அப்பாவு ஏற்கெனவே திருச்சி செயின்ட் பால் சர்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, “இந்த அரசை உருவாக்கியது நீங்கள்தான். திராவிட மாடல் அரசாங்கம் மற்றும் சமூக நீதிக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான் முக்கிய காரணம். நீங்கள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. உங்கள் பிரச்னைகளை பட்டியலிட்டு நேரடியாக முதலமைச்சரிடம் கொடுங்கள். அவர் எதையும் மறுக்க மாட்டார். ஏனெனில், இந்த அரசாங்கத்திற்கு நீங்கள்தான் காரணம் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இது உங்கள் அரசாங்கம் மற்றும் உங்கள் முதலமைச்சர்” என்று கூறியிருந்தார்.
தற்போது, இஸ்லாமியர்கள்தான் தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்தது என்று கூறியிருக்கிறார். ஆகவே, தி.மு.க.வினர் இடத்துக்குத் தகுந்தார்போல் பேசும் குணம் கொண்டவர்கள் என்பதை கிறிஸ்தவர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால், தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேசமயம், ஒரு சபாநாயகராக நடுநிலைமையோடு இருக்க வேண்டிய அப்பாவு, இதுபோன்று கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக பேசிவருவது ஹிந்துக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பாவுவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.