‘இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ’ என்று ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் போல, டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ இந்த தி.மு.க. அரசு என்று கொந்தளிக்கிறார்கள் அப்பாவி மக்கள்!
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை லாட்டரி என்கிற கொடூர அரக்கன், ஏராளமான ஏழை எளிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியது நினைவிருக்கலாம். இதனால், ஏராளமான அப்பாவி பெண்கள் தாலியை இழந்து தவித்தனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடத்திவந்த லாட்டரி சீட்டு உட்பட அனைத்து மாநில லாட்டரி சீட்டுகளுக்கும் 2003-ம் ஆண்டு தடைவிதித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இதன் பிறகு, மது என்கிற அரக்கன், ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமின்றி ஏராளமான குடும்பங்களை நாசம் செய்து வருகிறது.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று 2016 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். தொடர்ந்து மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. எனினும், ஜெயலலிதா திடீரென உயிரிழந்து விட்டதால் முழுவதுமாக மதுக்கடைகள் மூடப்படவில்லை.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னமும் மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் அக்கட்சித் தலைவர்கள் எடுக்கவில்லை.
அதேசமயம், டாஸ்மாக் மதுக்கடைகளால் நாள்தோறும் ஏதோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வகையில் சில உயிர்கள் பறிபோய்க் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சாட்சிதான் மதுரையிலும், சென்னையிலும் நேற்று (28-ம் தேதி)அரங்கேறி இருக்கும் இரு வேறு சம்பவங்கள். அதாவது, மதுரையில் குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை, அவரது பெற்றோரே அடித்துக் கொலை செய்து வைகை ஆற்றில் எரித்திருக்கிறார்கள். அதேபோல, சென்னையில் குடித்து விட்டு வந்து தான் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற நபரை, அவரது மனைவியே அடித்துக் கொலை செய்திருக்கிறார். இதைப் படித்து விட்டுத்தான், டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க தி.மு.க. அரசு காத்திருக்கிறதோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் அப்பாவி மக்கள்.