தமிழ்நாட்டில் பப் மற்றும் பார்களுக்கு 24 மணி நேர அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு வாக்குறுதியை வழங்கினர். இதனை நம்பி விடியல் கிடைக்கும் என்ற ஆசையில் பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். ஆனால், தற்போது தமிழகத்தில் மதுக்கடைகள் தொடர்பாக வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பார் டெண்டர் உரிமைகளை தி.மு.க.வினருக்கே வழங்கி வருகிறார் என்று கூறி, ஏற்கெனவே பார் எடுத்து நடத்தி வந்த உரிமையாளர்கள் அமைச்சர் வீட்டின் முன்பு அண்மையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 11% அதிகரித்திருப்பதாக அந்நிர்வாகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில்தான், பப்கள் மற்றும் தனியார் ஏ.சி. பார்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரையும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரையும் பார்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்குத்தான் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மதுக்கடைகளை மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
.