புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இதுநாள் வரை முரண்டு பிடித்து வந்த தமிழக அரசு, மெல்ல மெல்ல மத்திய அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளதற்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும், நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதேசமயம், மாணவர்கள் என்ன படிக்க வேண்டும்? எதை படிக்க வேண்டும்? என்கிற விஷயத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள், தலையிடுவது வெட்கக்கேடான செயல். மும்மொழி கல்விக் கொள்கை நிச்சயம் தேவை என்று கல்வியாளர்கள், சர்வதேச கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது. மும்மொழி கல்விக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இதுநாள் வரை முரண்டு பிடித்து வந்தது தமிழக அரசு. புதிய கல்விக் கொள்கை திட்டம், ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும். இதனை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதே கருத்தைத்தான், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமியும் தொடர்ந்து முன்வைத்து வந்தார். அந்த வகையில், மத்திய அரசின் திட்டமான புதிய கல்விக் கொள்கையை ஸ்டாலின் அரசு சத்தமில்லாமல் தற்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு துணைவேந்தர் பாலகுருசாமி தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.