தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு மக்கள் நடுத்தெருவுக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இதுதான் உங்கள் விடியல் அரசா? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர், கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த அவலத்தை எந்த மீடியாவும் எடுத்துக் காட்டவில்லை. ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார். இதன் பிறகே, அத்தொகுதி மக்களின் அவலநிலை தமிழகம் முழுவதும் தெரியவந்தது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளைக் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்யவில்லை என்று கொளத்தூர் தொகுதி மக்கள் ரத்தக் கண்ணீர் வடித்த காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இந்த சமயத்தில்தான் தமிழக அரசின் மற்றொரு அறிவிப்பு அவர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. ஆம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் இருந்த ஏழை எளிய மக்களின் வீடுகளை தி.மு.க. அரசு இடித்துத் தள்ளியது. இதனால், தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்த கொளத்தூர் தொகுதி மக்கள் இன்று வரை போராடி வருகின்றனர். இந்த சூழலில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4,000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், திடீரென அந்த பகுதி மக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்த தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கொளத்தூர் தொகுதியைத் தொடர்ந்து ஈஞ்சம்பாக்கம் பகுதி மக்களும் நடுத்தெருவுக்கு வந்து போராடும் சூழலை தி.மு.க. அரசு ஏற்படுத்தி விட்டது. எனவே, இதுதான் விடியல் அரசா? என்று மக்கள் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கிறார்கள்.