மாணவி லாவண்யாவின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று கோரி தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இதுதான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்புத் தெரிவித்து, அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தின. இதுகுறித்த செய்தி நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது. தனது மகளின் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அவரின் பெற்றோர்கள் உறுதியாக நம்பி வருவது போல, தமிழக மக்களும் இந்த வழக்கை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மேற்படி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கிறது தி.மு.க. அரசு. இதன் மூலம் அக்கட்சியின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது, தி.மு.க. என்றைக்குமே ஹிந்துக்களுக்கான அரசு அல்ல. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் மைனாரிட்டிகளுக்குமான அரசு என்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கத் தயாராகி வருகின்றன.