உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருப்பதற்கு ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் விமர்சனம் செய்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனில் சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆனால், உக்ரைன் நாட்டின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியர்களை நேரடியாக உக்ரைனில் இருந்து மீட்க முடியவில்லை. ஆகவே, அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றி, அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
விமானங்கள், அதிநவீன போர் விமானங்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், இந்தியர்கள் விரைவாக நாடு திரும்பும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு பல மாநில முதல்வர்கள் தங்களது ஆதரவினை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கான சிறப்பு குழு ஒன்றை தி.மு.க அரசு அமைத்துள்ளது. இக்குழுவில், திருச்சி சிவா MP, கலாநிதி வீராசாமி MP, எம்.எம்.அப்துல்லா MP, டி.ஆர்.பி.ராஜா MLA ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் இருந்து ஒரு வாரத்திற்குள் அனைத்து இந்தியர்களையும், மீட்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், மோடி அரசுக்கு நற்பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, தி.மு.க அரசு அமைத்து இருக்கும் குழுவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மீட்புப் பணிகள் முடியும் தருணத்தில் குழுவா? என்று ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.