குடியரசு தின அணிவகுப்பில் வ.உ.சி., பாரதியார் உள்ளிட்டோர் அடங்கிய அலங்கார ஊர்தி இடம் பெறாததை அரசியலாக்கிய தி.மு.க., காங்கிரஸை வெளுத்து வாங்கி இருக்கிறார் வ.உ.சி. பேத்தி மரகத மீனாட்சி ராஜா.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில் அவர் கூறியிருப்பதாவது:- “குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுப்பது என்பது அரசியல் சம்பந்தமானது இல்லை. கலை, இலக்கிய, கலாச்சார நிபுணர்கள் குழுவினர் செய்வது. இதுவரை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு 2 முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஏன் இவர்கள் குதிக்கவில்லை. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 5 முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஏன் இவர்கள் பாராட்டு தெரிவிக்கவில்லை. இவர்களா வ.உ.சி.க்கு மதிப்பு கொடுக்கிறார்கள்?
வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பா.ஜ.க. அரசு ரயில் விட்டுள்ளது. இவர்கள் இத்தனை ஆண்டுகளில் ஒரு கல்லூரியாவது ஆரம்பித்திருக்கிறார்களா? அதேபோல, பாரதியாருக்கு பா.ஜ.க. அரசு பனாரஸ் இந்து கல்லூரியில் ஒரு இருக்கை ஆரம்பித்திருக்கிறது. இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஊருக்கு ஊர் வ.உ.சி. பெயரிலா பேருந்து நிலையங்கள் இருக்கிறது? அல்லது நகர்களாவது உள்ளதா? எங்கு பார்த்தாலும் அண்ணா நகர், கலைஞர் நகர் என்றுதான் பெயர்கள் உள்ளன. தவிர, தெருவுக்கு தெரு வ.உ.சி.க்கா சிலைகள் உள்ளன? எங்கு பார்த்தாலும் ஈரோடு வெ.ராமசாமிக்குத்தான் சிலைகள் உள்ளன.
காங்கிரஸ் அரசு 2 பேர்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று சொல்லும். தி.மு.க. இரண்டே இரண்டு பேரைத்தான் தலையில் வைத்து கொண்டாடும். வ.உ.சி.க்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? வ.உ.சி.க்கு இவ்வளவு நாட்களில் ஒரு பல்கலைக்கழகமாவது உள்ளதா? இன்றைக்கு பயணச் சீட்டுகூட வாங்க முடியாத ஒருவருக்கு 39 கோடியில் சமாதி எழுப்புகிறது தி.மு.க. அரசு. ஆனால், வ.உ.சி. பெரும் கோடீஸ்வரர். அவரது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்காக இழந்தார். கடைசியாக அவர் வாழ்ந்த வீடு, 100 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்னும் அப்படியே உள்ளது. அதை எடுத்து நினைவு இல்லமாக அவர்கள் மாற்றியுள்ளார்களா?
காங்கிரஸ் அரசாங்கம் காங்கிரஸ் வரலாறு ஒன்றினை 1000 பக்கத்திற்கு எழுதியுள்ளது. அதில் சுதேசிய நாவாய் சக்கரம் பற்றி ஒரு வரிகூட இல்லை. அதற்காக அவர் நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்து செக்கு இழுத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வ.உ.சி. அவரது பெயரையா காங்கிரஸ் அலுவலகத்திற்கு வைத்திருக்கிறார்கள்? தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வ.உ.சி.க்கு என்ன செய்திருக்கிறது. இளைஞர்களுக்கு ஒரு பேச்சு போட்டியாவது நடத்தியுள்ளதா? பா.ஜ.க. ஒவ்வொரு மாவட்டத்திலும் வ.உ.சி. குறித்து பேச்சுப் போட்டி நடத்தியுள்ளது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.