தமிழக சட்டமன்றத்தை தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கேலி கூத்தாக்கி வருவது ஒருபுறம் என்றால். இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் நடந்துக் கொள்ளும் விதம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் மத்திய அமைச்சரிடம் வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர் போன்றவர்கள் அலங்கரித்த தமிழக சட்டமன்றம், இன்று தி.மு.க ஆட்சியில் உதயநிதி மற்றும் முதல்வரின் புகழ்பாடும் இடமாக மாறி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மக்களின் குறைகளை எடுத்து கூறி தீர்வு காணும் சட்டமன்றத்தை, தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் துதிபாடும் மன்றம் போல் மாற்றி விட்டார்களே என தமிழக மக்கள் குமுறும் சூழல் உருவாகியுள்ளது.
உதயநிதியின் ரசிகர் மன்றம் போல தமிழக சட்டமன்றம் மாறி வருகிறது, என பொதுமக்களும், நெட்டிசன்களும் கருத்து கூறும் அவலநிலை நீடிக்கிறது. அதே போல தி.மு.க எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சானிடரி நாப்கினுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்து 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், நாப்கினுக்கு 12% ஜி.எஸ்.டி. முக்கியமா என்று தி.மு.க. எம்.பி. அப்துல்லா, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து, தி.மு.க-வின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் தமிழகத்தில் உள்ள புனித தலங்கள், புனித யாத்திரை செல்லும் இடங்களில் பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்கான 20-21 ஆம் ஆண்டிற்கான நிதியினை உடனே வழங்க வேண்டும் என்று கடந்து ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
சென்னை, புதுச்சேரிக்கு 800 கோடி ரூபாய் பணம் முன்பே வழங்கப்பட்டு உள்ளது. அதில் பாதி தொகை ஏற்கனவே செலவழிக்கப்பட்டு விட்டது. புதிய திட்டங்கள், புதிய வரைமுறைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்த விவரங்களை வழங்கினால், மத்திய அரசு உடனே பரிசீலனை செய்யும். இவ்வாறு அமைச்சர் மீனாட்சி லேகி பதில் கூறியிருந்தார். தமிழக அரசு முன்பே பணம் பெற்றுள்ளது என்பது கூட தெரியாமல் தி.மு.க எம்பி மாநிலங்களவையில் பல்பு வாங்கிய சம்பவம் அடங்குவதற்குள், மற்றொரு தி.மு.க. எம்பி செந்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம் மிகப் பெரிய பல்பு வாங்கியுள்ளார்.
தர்மபுரி தொகுதி எம்பி., ’பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்பதன் அர்த்தம் புரியவில்லை என்கிறார். ஆனால் ’இந்திரா ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் இருந்தபோதெல்லாம் அவருக்கு புரிந்துள்ளது. பிரதமர் பெயரில் உள்ள திட்டம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புரிகிறது இவருக்கு மட்டும் புரியவில்லை என்றால் பாவம் தான் என்று குறிப்பிட்டு உள்ளார்.