வேலூரில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்ட முஸ்லிம் பிரமுகரின் வீட்டை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அந்த இஸ்லாமியர் கதறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள்தான். எங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மேடைதோறும் முழங்கி வருகிறார்கள் தி.மு.க. மற்றும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள். ஆனால், உண்மையிலேயே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான கட்சியா தி.மு.க. என்பது மில்லியன் டாலர் கேள்வி. 2 ஜி வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாஷா, மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்திற்கு இன்றுவரை விடை கிடைக்காத அவலம் நீடிக்கிறது. அதேபோல, கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம், முகக்கவசம் அணியாமல் வந்த காரணத்திற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
ஆனால், இஸ்லாமியர்களின் உரிமைக்காக போராடுபவர்கள் நாங்கள் என்று மார்பை தட்டிக்கொள்ளும் எந்தவொரு இஸ்லாமிய கட்சியும், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உட்பட யாரும் தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் காத்தனர். தமிழக காவல்துறை கல்லூரி மாணவருக்கு இழைத்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த கட்சிகளில் முதன்மையான கட்சி பா.ஜ.க. என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில்தான், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வேலூரில் 32-வது வார்டில் சோரான் சுல்தான் பாஷா என்பவர் போட்டியிட்டார். இவர் தேர்தலில் நிற்கும்போதே, எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று தி.மு.க.வினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால், இதையும் மீறி சுல்தான் பாஷா போட்டியிட்டிருக்கிறார். எனினும், தேர்தலில் தோல்வியை தழுவிவிட்டார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் சுல்தான் பாஷா வீட்டை முற்றுகையிட்டு, மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், இதுகுறித்து சுல்தான் பாஷா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். இக்காணொளிதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிது. தி.மு.க. ஆட்சியில் இருந்தால், ஹிந்துக்கள் மட்டுமல்லாது சிறுபான்மை மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியிருக்கிறது. இதையடுத்து, அப்பாவி இஸ்லாமியர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தை இப்பொழுதாவது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.