அடிமட்டத் தொண்டனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல், தனது குடும்பத்திற்கு சீட்டு ஒதுக்கிய தி.மு.க. அமைச்சரை அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமாக இருப்பவர் செஞ்சி மஸ்தான். கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்கள் ஏராளமானவர்கள் தி.மு.க.வில் இருக்க, செஞ்சி பேரூராட்சியின் 6 மற்றும் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வாரி வழங்கி இருக்கிறார். அரசியல் கட்சியில் அடிமட்டத் தொண்டனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனது குடும்பத்திற்கு சீட் ஒதுக்கிய அமைச்சரை தி.மு.க. தொண்டர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல, இது ஐனநாயகக் கட்சி என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால், அக்கட்சியினர்தான் வாரிசுகளை களமிறக்கி வருகிறார்கள். குறிப்பாக, கருணாநிதியின் குடும்பத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் கட்சிப் பதவியிலும், மீதிப் பேர் மத்திய, மாநில அரசுகளிலும் பங்கெடுத்து வருகிறார்கள் என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். அதேபோல, எனக்குப் பிறகு எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கருணாநிதியின் மகனும், தற்போதைய தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், அவரது மகன் உதயநிதியை அரசியலில் களமிறக்கி விட்டார்.
அதேபோல, தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலரும் தங்களது வாரிகளை களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது அமைச்சர் செஞ்சி. மஸ்தானும் தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சீட் வழங்கியிருக்கிறார். இதுதான், உ.பிஸ்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்ற பொன்மொழியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள் உடன் பிறப்புகள்.