அரியலூர் மாணவிக்கு நீதி கேட்டு முதல்வர் வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த தி.மு.க. அரசை கண்டித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் மாணவர் விரோத தி.மு.க. அரசு என்னும் ஹேஷ்டேக் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு பள்ளி ஆசிரியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று கடும் அழுத்தம் கொடுத்ததே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சியான தி.மு.க., இவ்விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க., ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. குறிப்பாக, ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. அரசு, ஏ.பி.வி.பி. மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.
தி.மு.க. அரசின் இந்த அராஜக போக்கைக் கண்டிக்கும் விதமாக, மாணவர் விரோத தி.மு.க. அரசு என்னும் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதுதான் தற்போது முதன்மை இடத்தை நோக்கி ட்ரெண்டாகி வருகிறது.