சென்னையில் தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமடைந்து வருகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்களை உறைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு மோசமடைந்து வருவதைக் கண்டு பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த செல்வம், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி இரவு 9 மணியளவில் செல்வத்தை சந்திப்பதற்காக 3 இரு சக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்திருக்கிறது. செல்வத்துக்கு சால்வை அணிவிப்பதுபோல வந்த அக்கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டியதை மெய்ப்பிக்கும் வகையில் இது இருக்கிறது.