மாநகராட்சி அதிகாரிகளை தி.மு.க. எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரத்துக்கு பின்னணியில் கமிஷன் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வினர் என்றாலே வம்புக்கு பெயர்போனவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். பிரியாணிக் கடையில் குங்பூ, கராத்தே, குத்துச்சண்டை போட்டதையும், பியூட்டி பார்லர் நடத்திய பெண்ணை எட்டி எட்டி உதைத்தையும், பஜ்ஜிக் கடையில் கும்மாங்குத்து விட்டதையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதுவும், ஆட்சியில் இல்லாதபோதே இந்த நிலை இருந்து வந்து வந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அட்டகாசம் தாங்கவில்லை என்று புலம்புகிறார்கள் அரசு அதிகாரிகள். ஹெல்மெட் போடாமல் வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரிடம், முடிந்தால் கைவைத்துப் பார் என்று சவால் விட்டதும், மாஸ்க் போடாததை சுட்டிக் காட்டியதால் நடக்குறது எங்க ஆட்சி என்று மிரட்டியதும்தான் இதற்கு உதாரணம்.
இந்த நிலையில்தான், மாநகராட்சி அதிகாரிகளை தாக்கி வசமாக சிக்கியிருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். தி.மு.க.வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.சங்கர். இவர், திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், மேற்கு பகுதிச் செயலாளராகவும் இருந்தார். இந்த சூழலில், திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள சாலைகளை புதுப்பிக்கும் பணிகளுக்காக 3 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், நடராஜன் தோட்டம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 26-ம் தேதி நள்ளிரவு தொடங்கி நடந்திருக்கிறது. இத்தகவலறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. சங்கர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 27-ம் தேதி அதிகாலையில் ஸ்பாட்டுக்கு வந்து பணியை நிறுத்தும்படி சொல்லி இருக்கிறார்.
இதனால், ஒப்பந்ததாரருக்கும், சங்கர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்த சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர், தனது உதவியாளருடன் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். அப்போது, சங்கரும், அவரது ஆட்களும் அந்த உதவிப் பொறியாளரையும், அவரது உதவியாளரையும் தாக்கியிருக்கிறார்கள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான உதவி பொறியாளர் லீவு போட்டுவிட்டுச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, உதவி பொறியாளரை தாக்கிய சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து, சங்கரின் கட்சிப் பொறுப்பு தலைமையால் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, மாநகராட்சி அதிகாரி தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., சாலைப் பணிகளை நிறுத்தச் சொல்ல சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எதற்காக பணிகளை நிறுத்தச் சொன்னார்? சாலைப் பணிகள் நடக்கும் இடத்தில் தி.மு.க.வினருக்கு என்ன வேலை? என்ன பேரம் பேசப்பட்டது? அரசு அதிகாரியை தாக்கும் அளவிற்கு நள்ளிரவில் என்ன நடந்தது? என்பதை தீர விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் தொடர்கதையாகிவிட்டதால், இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியறுத்தி இருக்கிறார். அதேபோல, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆகவே, கமிஷன் தகராறில் தகராறு நடந்ததா என்கிற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.