பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
தமிழக அரசு, பொங்கல் பரிசுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. இவ்வாறு வழங்கப்பட்டதில் பாதி பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், 21 பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிவிட்டு பாதி பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தமிழகம் முழுவதும் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆகவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக புகார் கூறப்பட்டது. மேலும், மக்களின் உயிரில் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் உணவுத்துறை அமைச்சரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கிய நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும்படி அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில்தான், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை தமிழக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தரமற்ற பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் அதிகாரி பலிகடா வாங்கப்பட்டிருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.