பொங்கல் பரிசுப் பொருட்களில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், தரமான பொருட்களே வழங்கப்பட்டது என்பது போல அமைச்சர் சவால் விட்டிருப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை விநியோகம் செய்தது. இப்பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்ததை அனைவரும் நன்கு அறிவர். காரணம், மிளகில் பருத்திக் கொட்டை, வெண்டைக்காய் விதை கலப்படமும், கோலமாவு போல மஞ்சள் தூளும், கிரீஸ் போல உருகிய நிலையில் இருந்த வெல்லமும்தான். இதனால், ஆளும் தி.மு.க. அரசு மீது தமிழக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க துவங்கினர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்தான், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியோ, இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமான பொருட்கள்தான் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:-
ஊழலே உலகம் என்று பழகிவிட்டதால் எல்லாவற்றையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்த்து, தங்களது இருப்பை காட்டிக்கொள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் குறித்து விவாதிக்க நான் தயார். ஆதாரமற்ற புகார் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் தயாரா? முதல்வர் தலைமையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோருவது எளிமையாக்கப்பட்டு பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். விலைப்புள்ளியில் குறைந்தவற்றிற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகள் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு மீதமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, துரிதமான நடவடிக்கைகள் மூலம் இம்மி அளவும் தவறு நடக்கக்கூடாது என்று அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் அளித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து, அனைத்து மக்களின் பேராதரவையும் பெற்று வரும் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையேனும் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு உண்மையைக் கொண்டு நாங்கள் பதிலடி தருவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தும், அமைச்சர் சக்கரபாணி ஒரு கருத்தும் என்று முரண்பட்ட வகையில் பேசி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் உயிரில் அலட்சியம் காட்டி பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட்டு வரும் அமைச்சர் மற்றும் முதல்வர் உடனே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.