சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசின் கடிதத்துக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், சமூக ஆர்வலர்கள் என்று சொல்லப்படும் பியூஸ் மானுஸும், சுந்தரராஜனும் கப்சிப் என்று மவுனம் காத்து வருவது ஏனோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. உலக பொருளாதார நிபுணர்கள் முதல் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் வரை பலர் இச்சட்டத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். வேளாண் துறையில் புதிய சீர்த்திருத்தங்கள் மற்றும் இச்சட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, அவர்களின் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். புதிய சட்டங்கள் வாயிலாக அரசு நடத்தும் மண்டிகள் மட்டுமில்லாமல், தனியாரிடமும் வரியை செலுத்தாமல் விவசாயிகள் எளிதில் தங்கள் பொருட்களை விற்க முடியும் என ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டது இந்த புதிய வேளாண் சட்டம்.
மோடி அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்திற்கு, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராக காட்டிக் கொள்ளும் பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் மற்றும் பியூஸ் மானுஸ் போன்றவர்கள் புதிய வேளாண் சட்டம் குறித்து தமிழக மக்களிடம் தொடர்ந்து தவறான பிரசாரத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சேலம் 8 வழிச்சாலையைக் கொண்டு வர மத்திய அரசும் அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் முடிவு செய்திருந்தது. இத்திட்டத்தால், சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று தி.மு.க.வின் ஊது குழலாக மாறி தவறான பிரசாரத்தை பூ உலகின் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் மற்றும் மூங்கில் போராளி என்று அழைக்கப்படும் பியூஸ் மானுஸ் போன்றவர்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசின் கடிதத்துக்காக தாங்கள் காத்து கொண்டிருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். ஆனால், முந்தைய ஆட்சியில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த போராளிகளான சுந்தரராஜனும், பியூஸ் மானுஸும் தி.மு.க. ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலை கொண்டு வருவது குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு இதுவரை வாய் திறக்கவில்லை. இனியும் திறப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆகவே, இருவரும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு மட்டுமே எதிரானவர்கள். உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல. போலி போராளிகள் என்பது நிரூபணமாகி இருக்கிறது.