நா வேணாம்னுதான் சொல்வேன்… உதயநிதியின் ‘நாடக’ பாலிடிக்ஸ்!

நா வேணாம்னுதான் சொல்வேன்… உதயநிதியின் ‘நாடக’ பாலிடிக்ஸ்!

Share it if you like it

உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் மிகப்பெரிய பாலிடிக்ஸ் அடங்கி இருப்பதாக காதை கடிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி. கட்சியின் தலைவர் மகன் என்பதைத் தவிர, மற்றபடி இவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. சினிமா தயாரிப்பதும், வெளியிடுவதும், நடிப்பதுமாக இருந்து வந்தார். திடீரென 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்தில் குதித்தவர், அடுத்த 2 ஆண்டுகளிலேயே 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் கண்டார். இவர், தற்போது அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், உதயநிதியும் சிறு வயது முதலே மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க ரெகமடேஷன் செய்ததே உதயநிதிதான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆகவே, அதற்கு பிராயச்சித்தமாக உதயநிதிக்கும் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

அதன் முதல்படியாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதுவும் எப்போது நடந்தது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சியில் முகாமிட்டிருந்தபோதுதான். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தி.மு.க.வினரும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், டெல்டா மாவட்டங்களி சிலவற்றிலும் இதேபோல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே, தீர்மானத்திற்கு உதயநிதி எதிர்ப்புத் தெரிவிக்கிறாரா? அல்லது, தமிழ்நாடு முழுவதும் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறாரா? என்று தி.மு.க.வினர் குழப்பமடைந்தனர். இதன் பிறகுதான், அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது, தி.மு.க.வை பொறுத்தவரை ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தீரமானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவின் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில்தான், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதோடு, அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதன் மூலம், நான் வேணாம்னுதான் சொல்வேன். ஆனா, நீங்க விடக் கூடாது. தீர்மானம் மேல தீர்மானமா போட்டு அமைச்சர் பதவியை பெற்றுத்தர வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Share it if you like it