என்னங்க ஸ்டாலின், சொன்னது என்னாச்சு? இ.பி.எஸ். காட்டம்

என்னங்க ஸ்டாலின், சொன்னது என்னாச்சு? இ.பி.எஸ். காட்டம்

Share it if you like it

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டிலும் இருப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் கடந்தாண்டு கொரோனா தொற்று பரவியபோது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்த நிலையில், தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான், டெல்மைக்ரான் என்ற பெயர்களில் பரவிவருகிறது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இதை காரணமாகக் காட்டி, கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு தடை விதித்திருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், குடிமகன்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளை மூட முன்வரவில்லை. ஆகவே, தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாட்டிலும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டிலும் இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு: கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாளொன்றுக்கு சுமார் 775 பேர் பாதிக்கப்பட்டபோது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தனது வீட்டுக்கு முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஸ்டாலின். ஆனால், தற்போது நாளொன்று கொரோனா பாதிப்பு 24,000 பேர் என்று இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறார். இது என்ன நியாயம்? தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆனால், மக்கள் உயிரைக் காக்க வேண்டிய தி.மு.க. அரசு, தனது கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறது. ஆகவே, மக்களின் உயிருடன் விளையாடாமல் தனது இரட்டை நிலைப்பாட்டை தி.மு.க. மாற்றிக் கொண்டு, தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it