இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரியார் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர்களின் கருத்துகள் ஒரே கருத்துகள் தான் என்று பொய் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பெரியார் என்பவர் வடநாட்டு அம்பேத்கர் எனவும், அம்பேத்கர் தென்னாட்டு பெரியார் எனவும் மக்களிடையே ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பெரியார் அம்பேத்கர் படிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி இருவரும் ஒரே தன்மையுடையவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
ஈவெராவுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாதவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். கல்வி, சமுதாய சிந்தனை, நாட்டின் ஒற்றுமை, வெளிநாட்டுக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை என்று எந்த துறையை ஆய்வு செய்தாலும் இருவரும் எதிர் எதிர் நிலையை கொண்டிருந்தனர். பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு அறிஞர் மற்றும் அறிவார்ந்த புத்திசாலி. பல நூல்களை கற்று தெளிந்தவர். அவருடைய புத்தகத்தை படிக்கும்போது அதில் அடிக்குறிப்புகள், ஆதாரங்கள், பல்வேறு அறிஞர்களுடைய மேற்கோள்கள், எல்லாம் மலிந்து இருக்கும். ஆனால் ஈவெரா அறிஞர் அல்ல. பல நூல்களை கற்றவரும் அல்ல. அவ்வப்போது அவருக்குத் தோன்றும் எண்ணங்களையே பரப்பி வந்தார். அதையும் மாற்றி, மாற்றி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பேசிவந்தார்.
ஈவெரா 40வயது வரை விலைமாதர் இல்லங்களில் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டவர். அதுவரை சமுகத்தைப் பற்றி அக்கறை கொள்ளாதவர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் தன் இளமைக்காலம் முழுவதும் கல்வி கற்பதிலும் தன் சமூகத்திற்காக மனுக்களை அளிப்பதிலும் ஈடுபட்டவர். மலையையும் மடுவையும் ஒருசேர ஒப்பிடுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாததோ, அதுபோலவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செய்யும் அநியாயம் ஆகும்.
இனவாதக் கோட்பாடு : ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா பெரியார் இனவாதி என்பதும் இனவாத கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆரிய-திராவிட இனவாதத்தை தமிழகம் முழுவதும் பரப்பியவர். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இனவாத கோட்பாட்டை கடுமையாக முன்னெடுத்தவர். ஆரியர்கள் வெளிநாட்டினர். இந்நாட்டின்மீது படையெடுத்து பூர்வீக மக்களை அழித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதன்மூலம் ஒருசாரரை வெறுத்து ஒதுக்கி அழிக்க தன் பிரச்சாரத்தை பயன்படுத்தினார். இனவாதக் கோட்பாடு மூலம் இந்திய மக்களை பிளவுபடுத்த முயன்றார் ஈவெரா. ஆனால் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரோ ஆரிய இனவாதக் கோட்பாட்டை முழுமையாக நிராகரித்தவர். ஆரிய இனவாதக் கோட்பாடு குப்பைத் தொட்டிக்கு போக வேண்டிய கோட்பாடு என்று மறுதலித்தவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். ஒருபோதும் இனவாதக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர் அவர். காரணம் அவர் மனிதர்களை நேசிக்கும் ஒரு மனிதநேயவாதி.
தலித்துகள்: ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய அனைவரையும் மதமாற்றத்திற்கு ஊக்குவித்தார். அதிலும் அவர் மதமாற்றத்திற்கு இஸ்லாத்தை முன்னிறுத்தினார். மதமாற்றத்திற்கு இஸ்லாமே நன்மருந்து என்றும் மக்கள் அனைவரும் இஸ்லாத்திற்கு மாறுமாறு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். இதை பெரியார் ஆய்வு செய்து சொன்னாரா என்றால் இல்லை. அவர் எப்போதும் ஆய்வு நோக்கில் செயல்படுபவர் அல்ல. இதற்கு மாறாக பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் மதமாற்றத்திற்கு பௌத்தத்தை முன்னிறுத்தினார். இஸ்லாம் ஒருபோதும் சமத்துவத்தை அளிக்காது; சகோதரத்துவத்தையும் அளிக்காது என்பதில் நம்பிக்கையுடையவர் அம்பேத்கர். இந்த நம்பிக்கை சாதாரணமாக ஏற்பட்டுவிடவில்லை. இஸ்லாத்தைப் பற்றியும் மற்ற மதங்களையும் பற்றியும் ஆழ்ந்து ஆய்வு செய்து இந்த முடிவுக்கு அவர் வந்தார். இஸ்லாத்திற்கு மாறினால் பல கோடி ரூபாய்களையும் கல்லூரியையும் தருகிறோம் என்று ஆசைவார்த்தை காட்டி அழைத்தபோதும் அதை நிராகரித்தவர். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினால் தேசியத்தன்மை மாறிவிடும் என்றார். பௌத்தம் மட்டுமே சமத்துவத்தை அளிக்கும் என்பதில் ஆர்வம் கொண்டு தலித்துகள் உள்பட அனைவரும் பௌத்தத்தை ஏற்க வலியுறுத்தினார் அண்ணல் அம்பேத்கர். எல்லோரும் மதம் மாறுங்கள் என்று சொன்ன ஈவெரா கடைசிவரை மதம்மாறாமல் அவர் இந்துவாகவே இருந்தார். பாபாசாகேப் அம்பேத்கரோ தான் சொன்னவாறு பௌத்தத்திற்கு மாறினார்.
தலித்துகளை எப்போதுமே தனியாகவே பிரித்து விலக்கினார் ஈவெரா. தான் சூத்திரர்களுக்காகவே போராடுகிறேன் என்பதை ஒளிவுமறைவில்லாமல் அறிவித்தார். தலித்துகளின் உரிமைகளுக்காக ஈவெரா எந்த ஒரு போராட்டத்தையும் தமிழகத்தில் நடத்தியதில்லை. தலித்துகள் சாலையில் நடப்பதற்கோ, தெருவில் நடப்பதற்கோ, குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கோ, கோயிலில் நுழைவதற்கோ ஈவெரா தமிழகத்தில் எந்த ஒரு போராட்டத்தையும் தன் தலைமையில் நடத்தியதே இல்லை. ஆனால் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மஹத் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகவும், கலாராம் கோயிலில் நுழைவதற்காகவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
ஈவெரா தலித்துகளை மற்ற சாதி இந்துக்களுக்கோடு இணைப்பதை எதிர்க்கிறார்.
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
ஈவெரா எப்போதுமே தலித்துகளுக்கு எதிராகவே இருந்தார். முதுகுளத்தூர் கலவரமாக இருந்தாலும் சரி, கீழ்வெண்மணி படுகொலையாக இருந்தாலும் சரி ஈவெரா தலித்துகளுக்கு எதிராகவே செயல்பட்டார். கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து கொல்லப்பட்டார்கள். அதற்கு ஈவெரா அளித்த அறிக்கை : ‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’ (விடுதலை 20-1-1969)
கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூறுகிறார் ஈவெரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவெரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம் என்று படுகொலையை ஆதரிக்கிறார் ஈவெரா. பாதிக்கப்பட்ட தலித்துகளின் பக்கம் நிற்காமல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்களை வெளியிட்டார். மாறாக அண்ணல் அம்பேத்கரோ தலித்துகளுக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் பல்வேறு சட்டங்களை கொண்டுவந்தவர். அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தார்.
ஈவெரா பட்டியல் சமூக மக்களை பற்றி எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டுள்ளார் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈவெரா கூறுகிறார் : –
‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’
(விடுதலை 11.11.1957)
பாகிஸ்தானில் தலித்துகள் : ஈவெரா அம்பேத்கர்
பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் தலித்துகள் கொடுமை படுத்தப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி எந்தவித உணர்வும் இல்லாமல் அதை கண்டிக்காமல் பாகிஸ்தானையும் முஸ்லீம்களையும் ஆதரித்தார் ஈவெரா. ஆனால் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்பட்ட தலித்துகளை காப்பாற்ற மகர் ரெஜிமெண்ட்டை அனுப்பினார். பாகிஸ்தானில் உள்ள தலித்துகள் இஸ்லாத்திற்கு மாறக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். அதுபோலவே இந்திய சமஸ்தானங்களை இணைப்பிற்கு முழு ஒத்துழைப்பை நல்கினார் அம்பேத்கர். இந்தியாவுடன் இணைய மறுக்கும் ஹைதராபாத் நிஜாமுக்கு அங்கிருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் ஆதரவு அளிக்க கூடாது என்று பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டார் அம்பேத்கர் அவர்கள்.
இந்திய சுதந்திரம் : ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா பெரியார் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக இருந்தார். 27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டில் ஈவெராவின் ஆசியோடு ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானத்தில்,
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாத தும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.’’
இதுமட்டுமல்ல, ஈவெரா சுதந்திர தினத்தை துக்கநாள் என்று அறிக்கை வெளியிட்டார். வெள்ளைக்காரர்களே இங்கு ஆள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பரப்பி வந்தார். ஆனால் அண்ணல் அம்பேத்கரோ நாட்டு விடுதலைக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. வெள்ளை அரசாங்கத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடவில்லை. இலண்டன் வட்டமேசை மாநாட்டிலும் பின்பு பல இடங்களிலும் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாகவே பதிவு செய்துள்ளார். மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட நான் தேசப்பற்றாளன் என்று ஒருசமயம் அவர் அறிக்கையே வெளியிட்டார்.
இந்திய ஒற்றுமையை – ஒருமைப்பாட்டை சிதைப்பதில் ஈவெரா முன்னணியில் நின்றார். அதன் ஒரு பகுதியாக ஈவெரா திராவிடஸ்தான் கேட்டார். இந்தியாவிலிருந்து திராவிட நாடு தனியாகப் பிரிக்க பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். அதுபோலவே முஸ்லீம் லீக்கின் தலைவர் ஜின்னா பாகிஸ்தான் கேட்டார். ஆங்கிலேய அரசாங்கமும் மற்றப் பலரும் அம்பேத்கரிடம் தலித்ஸ்தான் கேளுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கர் ஒருபோதும் தலித்ஸ்தான் கேட்கவில்லை. இந்தியாவை கூறுபோட்டு தலித்ஸ்தான் பெறுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால் அக்கோரிக்கையை முளையிலேயே வெட்டி எறிந்துவிட்டார். இல்லையென்று சொன்னால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த துபோல் தலித்ஸ்தானும் பிரிந்துபோயிருக்கும்.
இந்தி மற்றும் சமஸ்கிருதம் : ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழியின்மீது தீராத எதிர்ப்பு மனநிலையை கடைசிவரைக் கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தினார். மொழிவெறியைத் தூண்டி இந்திய ஒற்றுமையை குலைத்தார். ஆனால் அம்பேத்கர் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்தி அவசியம் என்று கூறினார். சமஸ்கிருதம் தேசிய அலுவல் மொழியாக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசினார். ஆனாலும் ஒருபோதும் அம்பேத்கர் மொழி வெறியை தூண்டவில்லை.
கம்யூனிசம் : ஈவெரா அம்பேத்கர்
பொதுவுடைமை என்று சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர் ஈவெரா. ரஷ்யா சென்றுவந்தபின் பொதுவுடைமை கொள்கையை தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரப்பினார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிசத்தை எதிர்த்து வந்தார். கம்யூனிசம் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டது என்றும் தான் யாரையாவது எதிரியாக நினைக்கிறேன் என்றால் அது கம்யூனிசத்தையே என்றும் பறைசாற்றினார். கம்யூனிசவாதிகளோடு தேர்தல் உறவுகூட அம்பேத்கர் வைத்துக்கொள்ளவில்லை. தலித் மக்களுக்கு கம்யூனிசத்திற்கு மாற்றாக அவர் பௌத்தத்தையே முன்வைத்தார்.
வெளிநாட்டுக்கொள்கையில்கூட சீனாவுடனும் ரஷ்யாவுடனும் இந்தியா உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்பது அண்ணலின் தீர்க்கமான கருத்து. சீனா என்றாவது ஒருநாள் நம்மீது அதாவது இந்தியாவின்மீது படையெடுக்கும் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார். 1962ல் அது நடந்தது.
மதம் : ஈவெரா அம்பேத்கர்
ஈவெராவைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு மதம் தேவையில்லை. மதம் மனிதனை முட்டாளாக்குகிறது என்பது ஈவெராவின் கருத்து. ஆனால் அம்பேத்கரோ மதம் மனிதனுக்கு கட்டாயம் தேவை என்கிறார். தன்னிடம் இருக்கிற நல்ல பண்புகள் மத த்தினால் ஏற்பட்டவையே என்கிறார். மதம் ஒரு அபின் என்று சொல்வதை அம்பேத்கர் விமர்சனம் செய்து மனிதனுக்கு மதம் முக்கியத்தேவை என்பதை விளக்கியிருக்கிறார்.
ஒரே நாடு : ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றார். பல தேசிய இனங்களின் கலவை என்றார். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை என்றும் பரப்புரை செய்தார். ஆனால் அம்பேத்கர் தெளிவாகவே இந்தியா ஆன்மிக பண்பாட்டின் அடிப்படையில் இந்தியா பல்லாயிரம் வருடங்களாகவே ஒரே நாடாக விளங்கி வருகிறது என்று ஆணித்தரமாக எழுதினார்.
இந்திய ஒருமைப்பாடு : ஈவெரா அம்பேத்கர்
ஈவெரா இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை இல்லாதவர். இந்தியா தனித்தனி நாடாக பிரிந்து போவதில் ஈவெராவிற்கு விருப்பமே. ஆனால் அண்ணல் அம்பேத்கருக்கு இந்திய ஒருமைப்பாட்டில் அலாதியான பிரியம் இருந்தது. இந்தியா மீண்டும் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். இதைப் பற்றி அவர் அரசியல் அமைப்பு அவையில் பேசிய பேச்சு நமக்கு உணர்த்தும்.
அம்பேத்கர் பேசுகிறார் :
‘‘என்னை மிகவும் கலக்கமடையச் செய்யும் நிலைமை எதுவென்றால் இந்தியா இதற்குமுன் ஒரே ஒரு தடவை மட்டுமே தன் சுதந்திரத்தை இழக்கவில்லை. இந்திய மக்களே செய்த துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தாலும் இந்தியா தன் சுதந்திரத்தைப் பல தடவை இழந்தது. முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தபோது சிந்துவின் மன்னன் தாகிரின் படைத் தளபதிகள் முகம்மது பின் காசிமின் கையாட்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தங்களுடைய அரசருக்காகப் போரிட மறுத்தனர். ஜெயச்சந்திரன், முகம்மது கோரியை இந்தியா மீது படையெடுத்து வந்து பிருதிவிராஜனுக்கு எதிராகப் போரிடுமாறு அழைத்தான். அவனுடைய உதவியையும், சோலங்கி மன்னர்களின் உதவியையும் அளிப்பதாகக் கோரிக்கு உறுதி கூறினான். சிவாஜி இந்துக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது மற்ற மராட்டியத் தலைவர்களும் இராசபுத்திர அரசர்களும் முகலாயப் பேரரசின் பக்கம் நின்று சிவாஜிக்கு எதிராகப் போரிட்டனர்.
பிரிட்டிஷார் சீக்கிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டபோது, சீக்கியர்களின் தலைமைத் தளபதி செயல்படாமல் வாளாவிருந்தார். சீக்கிய அரசைக் காத்திட அவர் உதவவில்லை. 1857-இல் இந்தியாவின் பெரும்பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது சீக்கியர்கள் ஏதும்செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். … வரலாறு திரும்புமா…?
சாதிகள், மதங்கள் முதலான பழைய பகைச் சக்திகளுடன் தற்போது வெவ்வேறான மற்றும் எதிரெதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பல உருவாகியிருப்பது மேலும் கவலைகொள்ளச் செய்கிறது… நாட்டின் நலனைவிடத் தங்கள் தங்கள் கட்சியின் நலனை இக்கட்சிகள் முன்னிறுத்தாதவாறு இந்திய மக்கள் மனத்திட்பத்துடன் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டின் சுதந்திரம் இரண்டாவது முறையாக இடருக்குள்ளாகிவிடும். மீண்டும் மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும். கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை நம்முடைய சுதந்திரத்தைக் காத்திடுவோம் என்று நாம் உறுதி பூணுவோம்.’’
1949 நவம்பர் 25ம் தேதி அன்று அரசியல் சட்டம் குறித்து நடந்த மூன்றாவது சுற்று விவாதத்திற்குப் பதிலளித்து அம்பேத்கர் இவ்வாறு பேசினார். அம்பேத்கரின் இந்த அறைகூவல் இந்திய தேசியத்திற்கானஅறைகூவல். இந்திய தேசியம் மறுபடியும் சிதைந்துவிடக்கூடாது என்ற பேரார்வத்தினால்– தேசிய உணர்வினால் உந்தப்பட்டு எழுந்த அறைகூவல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி எந்த துறையை எடுத்து ஆய்வு செய்தாலும் ஈவெராவும் அண்ணல் அம்பேத்கரும் எதிர் எதிர் நிலையைத்தான் கொண்டிருந்தனர். மக்களை முக்கியமாக தலித்துகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே அண்ணலையும் ஈவெராவையும் ஒப்பிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். இது அண்ணல் அம்பேத்கருக்கு செய்கிற மாபெரும் அநியாயம்.
மா.வெங்கடேஷ்….!