மொழி பிரிவினைவாதம் அன்றே எச்சரித்த டாக்டர் BR அம்பேத்கர்

மொழி பிரிவினைவாதம் அன்றே எச்சரித்த டாக்டர் BR அம்பேத்கர்

Share it if you like it

B.R. அம்பேத்கர் என்னும் ஆதவன்

மராட்டிய பூமி, பல ஞானிகளையும், சித்தர்களையும், சமூகத் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் தந்து உள்ளது. புரட்சிகரமான கருத்திற்கும், புனிதமான சிந்தனைக்கும், விளை நிலமாக விளங்கி உள்ளது.

அங்குள்ள “அஜந்தா” பெளத்த சிந்தனை மரபிற்கும்; “எல்லோரா” இந்து சமய மரபிற்கும்; “ஷீரடி” இந்து – இஸ்லாமிய ஒற்றுமைக்கும், அமைந்து உள்ளன.  

மாவீரன் நெப்போலியனுக்கு இணை சொல்ல வேண்டுமா? – சத்ரபதி சிவாஜி; காரல் மார்க்ஸ் இணை வேண்டுமா? – மகாத்மா ஜோதிபா பூலே; மக்களின் அன்பிற்கு ஒரு திலகர், அரசியல் சிந்தனைக்கு ஒரு கோகலே, சமூகப் புரட்சிக்கு மன்னர் சாஹூ என மராட்டியத்தின் பெருமை பேசி முடியாத ஒன்று.

இந்தப் பெருமைக்கு பெருமை சேர்த்தவர், அம்பேத்கர். ஆனாலும், கடந்த 60 ஆண்டுகளாக, நடந்த அரசியல் சூழ்ச்சியால் அவரை ஒரு ஜாதித் தலைவராக சுருக்கி விட்டது, ஒரு கூட்டம். ஆதவன் எப்படி இருக்கும் என்று கேட்டவனுக்கு, நெருப்புக் குச்சியை கொளுத்திக் காட்டியது போல .

உலகெங்குமுள்ள ஒடுக்கப் பட்ட மனிதர்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி அம்பேத்கர்,  பொருளியலில் டாக்டர் பட்டம் பெற்ற, ஒரு பொருளாதார மேதை. காந்தி, நேரு, ஜின்னா ஆகியோரை நேரடியாகக் கண்ணில் பார்த்த அரசியல் தலைவர். இன்று 2021ல், நாம் சந்திக்கும் அரசியல் சிக்கல்களை, அன்றே எடுத்துரைத்து தீர்வும் சொன்ன ஒரு தீர்க்க தரிசி.

ஒரு சோறு பதம் :

மொழி வாரி மாநிலங்கள் பற்றி, 1946ல் கூட்டம் நடக்கிறது. அப்போது அம்பேத்கர் எழுதினார்,  “ மொழி வாரி மாநிலங்கள் அமையா விட்டால், அம்மாநில மக்களிடையே உளப் பூர்வமான ஒற்றுமை நிலவாது. பண்டிகை நாட்கள், திருவிழாக்கள் ஒன்றாக இல்லாவிட்டால், கலாச்சார ஒற்றுமை நிலவாது. அரசு நிர்வாகம், சீராக இருக்காது. அரசு மக்களையும், மக்கள் அரசின் கருத்தையும் தடை இன்றி அறிந்து கொள்ள முடியாது. எனவே, மொழி வாரி மாநிலங்கள் கண்டிப்பாக வேண்டும். ஆனால், ஒரு மொழிக்கு ஒரு மாநிலமா? அல்லது ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழியா? என்ற வேறுபாட்டை நாம் உணர வேண்டும்.

ஒரு மொழி பேசும் மக்களை, ஒரே மாநிலமாக ஒன்று சேர்க்கும் போது, நான் மேற் கூறிய அனைத்து நன்மைகளும் கிடைக்கும். ஆனால் அந்த மாநிலத்தில், பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியே, அம்மாநிலத்தின் நிர்வாக மொழியாக அமையும் போது, மொழி சார்ந்த சர்வாதிகாரத்தையும், மொழியின் அடிப்படையில் அடக்கு முறையையும், அண்டை மாநிலங்களோடு இணக்கமற்றத் தன்மையையும் ஊக்குவிக்கும்.

இதனை இப்படியே விட்டு விட்டால், இன்று இல்லா விடினும், என்றாவது ஒரு நாள், அப்படி ஒரு மாநிலத்தில், நேர்மையற்ற தலைவர்கள் வருவார்கள். அவர்கள் அம்மாநில மக்களை, மொழியின் அடிப்படையில் திசை மாற்றி, மத்திய அரசோடு மோதல் போக்கை உருவாக்குவார்கள். அதன் உச்சமாக, இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற குரல் ஒலிக்கும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இதற்கு ஒரே தீர்வு, ஒரு மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் ஒரு மொழி, அந்த மாநிலத்தின் நிர்வாக மொழியாக இருக்க கூடாது. வேறு ஒரு மொழியை, பயன் படுத்த வேண்டும்.  வேறு மொழியைக் கற்றுக் கொண்டால், அவன் மேலும் பயன் அடைவானே அன்றி, அது அவனுக்கு பலுவாக இருக்காது.  ஹிந்தி கற்றுக் கொள்வதால் மராட்டியனோ, தமிழனோ, வங்காளியோ எந்த விதத்தில், பழுது பட்ட மராட்டியனாகவோ, தமிழனாகவோ, வங்காளியாகவோ மாறுகிறான்? இத்தகையா வாதம் வீண் பேச்சு”

 (பக்கம் 144-145 selected writings and speeches of Babasaheb Ambedkar)

 எழுதியது 1946ல், அது இன்று எழுதியது போல, இருக்கிறது.

  • பா. பிரபாகரன்

Share it if you like it