டாக்டர் ராதாகிருஷ்ணன், வார்த்தைகளின் வலிமையை அறிந்தவர். கல்வி என்பது பண்பு அடங்கிய சிந்தனை, ஒழுக்கம் நிறைந்த ஆற்றல், கணித-விஞ்ஞான அறிவு மேம்படுத்தல், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறமை ஆகியவற்றை வளர்த்து, ஒரு மனிதனை தன்னம்பிக்கையுடன், சமுதாயத்தில் வாழும் தகுதியான நல்ல மனிதனாக உருவாக்குவதாகும் என்பது, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கருத்து. இதற்காக, ஆசிரிய பெருமக்கள், கடுமையாக முயற்சிகள் எடுத்து, புதிய கல்வி கற்பிக்கும் முறைகளை, ஆராய்ந்து அறிந்து கொள்வதில், பின் வாங்க கூடாது என்பதும், அவரது கோரிக்கையாக இருந்தது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஏழை ப்ராமண குடும்பத்தில், 1888 செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று, பிறந்தார். குடும்பத்தின் வறுமையின் காரணமாக, மிக சிரமங்களுக்கிடையே “ஸ்காலர்ஷிப்” (scholarship) உதவித் தொகையால் தான், பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை படித்து முடித்தார். தத்துவ துறையில், முதுகலை பட்டமும் பெற்றார்.
மத புராணங்களில் ஆர்வம் கொண்டிருந்ததால், அவர் பகவத் கீதை, பிரம்மசூத்ரா, சங்கரரின் வர்ணனைகள், உபநிஷத், போன்ற பல உன்னதமான இந்து தத்துவங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
புத்த மதம், சமணம் மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் தத்துவங்களையும், அவர் கற்றுக் கொண்டார்.
கல்வியாளராக முதலில் ப்ரெசிடெண்சி கல்லூரியில் (Presidency College), பணியாற்றிய பின்பு, மைசூர் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில், பணியாற்றினார்.
அவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகத்தை உள்ளடக்கிய பல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராகவும் ஆனார்.
பல்கலைக்கழக ஆணையத்தின் தலைவராக, டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்த போது, மாணவர்களின் வளர்ச்சி மற்றும் கல்வியின் மேம்பாட்டிற்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி கல்வி முறையில், பல நல்ல கொள்கைகளை செயல் படுத்தினார்.
தத்துவத் துறையில், அவரது நிபுணத்துவத்தை அறிந்த, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University), அவரை சிறப்பு விருந்தினராக, இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை பற்றிய அவரது கருத்தை தெரிந்து கொள்வதற்காக, அழைத்தன. இந்திய தத்துவத்தை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், உலக அளவில் எடுத்து சென்றார்.
இந்திய சுதந்திரத்திற்கு சற்று முன்பு, யுனெஸ்கோவின் (UNESCO) (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) தூதராக, நியமிக்கப் பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் சோவியத் யூனியனின் (Soviet Union) தூதராகவும், நியமிக்கப் பட்டார்.
1952 ல், சுதந்திர இந்தியாவின் துணை ஜனாதிபதியாக, தொடந்து 10 ஆண்டுகள், இரண்டு முறை பதவிக் காலத்துக்கு, தன் சேவையை மக்களுக்காக நேர்மையாக ஆற்றினார்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாரத ரத்னா (Bharat Ratna) விருதைப் பெற்றவர்.
1962 ல், அவர் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியானார்.
1975 ல் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மறைவால் இந்தியா ஒரு சிறந்த தத்துவ ஞானி, கல்வியாளர் மற்றும் சிந்தனையாளரை இழந்தது.
பல சர்வதேச விருதுகளை பெற்ற, சிறந்த கல்வியாளராக இருந்த, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சேவைகளை அங்கீகரித்து, மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும், “ஆசிரியர் தினமாக”, இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது.
கல்வி மூலமாக, பலரின் இருண்டு போன ஆன்மாவையும், சிந்தனையையும் வெளிச்ச படுத்திய பேராசிரியராகவும், தேச சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாடு அறிய செய்த தலைவராகவும், தேசத்துக்கான பல நல்ல தலைவர்களை உருவாக்கின சிறந்த ஆசானாகவும் இருந்த, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்ற மகா மேதையை, கை கூப்பி தலை வணங்கி, நினைவு கூறுவோமாக…
– Dr.M.Vijaya