கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைக்கோவிலூர் மிகப்பெரிய கிராமம். மலைக்கோவிலூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் மூலப்பட்டி. இதேபோல 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன வடுகநாகம்பள்ளி மற்றும் குப்பை மேட்டுப்பட்டி கிராமங்கள். இங்குள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளூரில் உள்ள பள்ளியிலேயே ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்கின்றனர். அதன்பிறகு, ஆறாம் வகுப்புக்கு மலைக்கோவிலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குதான் அவர்கள் செல்ல வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை பள்ளி நேரத்திற்கு பேருந்து இயக்கப்பட்டதால் அந்தப் பேருந்தில் அம்மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். வெளியூரில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும், பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு இந்த ஒற்றை பேருந்தும் நிறுத்தப்பட்டது. பேருந்து வசதி இல்லாததால் தற்போது மாணவர்கள் தினசரி மூன்று முதல் ஆறு கிலோமீட்டர் வரை நடந்து சென்று வருகின்றனர்.
காலை வேலைகளில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லும் பலர் இந்த மாணவர்கள் மீது பரிதாபப்பட்டு தங்களுடைய வாகனங்களில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுகின்றனர். ஆனால் மாலை நேரத்தில் வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் தினமும் மூன்று முதல் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் ஏழை கிராமத்து மக்கள் மற்றும் மாணவர்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் நம்மூலமாக கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, “கொரோனா காலத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இயக்கப்படவில்லை. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்று கூறுகின்றனர்.