இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமடைந்து வருவதாகவும், 2022 – 23-ம் நிதியாண்டில் 9 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வேகமாக முன்னேறும் நாடு என்ற சிறப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்திருக்கிறது.
உலக பொருளாதார நிலவரம் குறித்து மேம்படுத்தப்பட்ட புதிய அறிக்கையை ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நிதியம் வெளியிட்டிருக்கிறது. இதில்தான், ‘2022 – 23-ம் நிதியாண்டில் இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும். இதன் மூலம், தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற சிறப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும். அதேபோல, இந்தியாவின் கடன் வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவிற்கு அடுத்தாண்டு மேம்படும். மேலும், எதிர்பார்த்ததற்கும் மேலாக நிதித் துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் முதலீடுகளும், நுகர்வு மற்றும் தேவைப்பாடு அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறுகையில், ‘கொரோனா பாதிப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதாரம் அழகாக மீண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார மீட்சி நீடித்து வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவிகிதமாக மீட்டெடுக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.