“எனது கருத்தை திரும்பப் பெற மாட்டேன்” – ‘தில்’ இளையராஜா!

“எனது கருத்தை திரும்பப் பெற மாட்டேன்” – ‘தில்’ இளையராஜா!

Share it if you like it

மோடி பற்றிய தனது கருத்தை திரும்பப் பெற மாட்டேன் என்று இசைஞானி இளையராஜா உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

ப்ளூ கிராஃட் பவுண்டேசன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற புத்தகத்துக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தது. அதில், அம்பேத்கருக்கு நிகர் மோடிதான் என்று இளையராஜா குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது. மேலும், இப்புத்தகம் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

அப்புத்தகத்தில் இசைஞானி எழுதியிருக்கும் முன்னுரை இதுதான்… “சில ஆண்டுகளுக்கு முன், ‘டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நதி நீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கையின் சிற்பி’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய செய்தியைப் படித்தேன். நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவர் கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது சிந்தனைகளைச் செயல்படுத்துவதும் அதைவிட முக்கியமானது. ஒருவரது சிந்தனைகளுக்கு வரம்புகள் இல்லை, ஆனால் அதைச் செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்பட முடியும். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியைப் பற்றி இந்த நூல் கூறுகின்றது.

தொழில்துறையைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளைச் செய்துள்ளது. சமூக நீதி என்று வரும்போது பல சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓ.பி.சி. ஆணையத்தை அமைத்தது மூலமாகவும் விளிம்பு நிலை மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மோடி அறிவித்த வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகிய திட்டங்களின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோடியின் அரசு எடுத்ததாகச் செய்திகளில் படித்தேன். பெண்கள், குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்கான சுதந்திரம் அளிக்கும் நடவடிக்கை இது. பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் பாதுகாத்து கல்வி தருவது குறித்த பிரதமரின் திட்டங்களும் நினைவுக்கு வருகின்றன. பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், ‘குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற நடவடிக்கையின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார். அம்பேத்கர், மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளை இந்த நூல் மக்களுக்கு எடுத்துரைக்கும் என்று நம்புகிறேன். இருவருமே வறுமையையும், விளிம்புநிலை சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெரிய பாடுபட்டவர்கள்.

இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவரும் வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல, செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள். இந்தப் புத்தகம் அம்பேத்கர் கனவுகளை நிறைவேற்றும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருப்பதை மக்களுக்கு எடுத்துக்கூறும். பிரதமர் மோடி கட்டியமைக்கும் தற்சார்பு இந்தியா, விடுதலை போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும். இந்நூல் நம் மண்ணின் மிகப்பெரிய மைந்தனின் பெருமையை வெளிப்படுத்துகிறது என்பதையும், நம் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதையும் கூறுகின்றது. இந்தப் புத்தகத்தை இளைய தலைமுறையினர் நிச்சயம் படிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.

இதைப் பார்த்துவிட்டுத்தான் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதா என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன திராவிட அல்லுசில்லுகள். ஏதோ இசைஞானி சொல்லக் கூடாததை சொல்லிவிட்டதுபோல, அவரது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான், தனது கருத்தை ஒருபோதும் வாபஸ் வாங்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. இது தொடர்பாக, இளையராஜாவை சந்தித்து விட்டு வந்த அவரது சகோதரர் கங்கை அமரன் கூறுகையில், “அண்ணன் தான் இசையமைத்த பாடல் மற்றும் காட்சிகளுக்கான இசையையே திரும்ப வாபஸ் பெறாதவர். ஆகவே, தான் கூறிய கருத்தையும் வாபஸ் பெற மாட்டார். இதை அவரே உறுதியாகக் கூறிவிட்டார். பிரதமர் மோடியின் பல திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்பட்டு விட்டால், அவை உண்மையாகவே மறைந்து விடுமா? என்றும் கேட்கிறார். மேலும், நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஆகவே, நான் அரசியல் செய்யவும் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்” என்று கங்கை அமரன் தெரிவித்திருக்கிறார்.

ஆக, இசைஞானி இளையராஜா தான் என்றும் ராஜாதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இதனால், திராவிட சொம்புகள் இளையராஜா மீது புழுதியை வாரித்தூற்றி வருகின்றனர்.


Share it if you like it