தமிழகத்தில் மின்சார வாரியம் மின்கட்டணம் தாமதமாக செலுத்தும் போது கூடுதலாக அபராத தொகை வசூலிப்பது வழக்கம். பெயருக்கு அபராதம் என்ற அளவில் இருந்த சிறிய தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக அபராதமா ? அல்லது கந்து வட்டியா ? என்ற ரீதியில் வளர்ந்து நிற்கிறது. சப்தமின்றி மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதன் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் நிர்வாக குளறுபடிகள் காரணமாக மக்கள் அனுபவிக்கும் அலைக்கழிப்புகள் மன உளைச்சல்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
ஒருபுறம் மின்சார திருட்டு. மறுபுறம் பலநூறு கோடிகளில் வசூல் ஆகாமல் இருக்கும் மின் கட்டணங்கள் என்று தமிழக மின்சார வாரியம் பெரும் இழப்பு மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனால் மின் திருட்டை தடுக்கவோ அல்லது கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ள மின் கட்டண பாக்கியை வசூலிக்க அதிரடி நடவடிக்கை ஏதுமில்லை.காரணம் அவர்கள் செல்வாக்கு. அங்கெல்லாம் தமிழகம் மின்சார வாரியம் எட்டிக் கூட பார்க்க முடிவதில்லை. சாமானிய மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் குறித்த நாளை விட ஒரு நாள் தாமதமானாலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகிறது.
மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு சம்பந்தமாக புகார் கொடுக்கும் போது எட்டி பார்க்க ஒரு வாரம் தேவைப்படும் மின் வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மட்டும் அன்றைய பொழுது போவதற்குள் வீட்டிற்கு வந்து மின் விநியோக துண்டிப்பு செய்து உபகரணத்தை கையோடு கொண்டு போவது மக்களை வெறுப்பில் நிற்க வைக்கிறது. மேலும் மின் கட்டணம் செலுத்தும் போது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஏதாவது குளறுபடி நேர்ந்து அதை ஆவணமாக காண்பித்து அவகாசம் கேட்டால் கூட மறுத்து ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டிப்பது மக்களை வேதனையில் ஆழ்த்துகிறது.
கடந்த 2000 மாவது ஆண்டு வரை ஆயிரம் முதல் 2 ,000 வரை சாதாரணமாக மின்சாரம் கட்டணம் செலுத்தி வந்த குஜராத் மக்கள் 2005 – 2006 தொடங்கி அதே மின்சார நுகர்வுக்கு கட்டணமாக 500 – 600 ரூபாய் செலுத்தும் நிலை வந்தது. இன்னும் கூடுதலாக தடையில்லா மின்சாரம் தேவைக்கேற்ப உடனடியான இணைப்புகள் உபயோகத்தை பொறுத்து கட்டண விகிதம் என்றெல்லாம் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் வந்து சாமானிய மக்கள் மின்சார கட்டணத்தை இலகுவாக ஏற்கும் படியாக சூழல் மாறியது.
காரணம் 2001 ல் குஜராத் மாநில அரசு ஒருபுறம் நீராதாரம் சீர்பட வரத்து கால்வாய்கள் – இணைப்பு கால்வாய்கள் – மாநில அளவிலான நதிநீர் இணைப்பு என்று செய்யும் போதே தண்ணீர் பெரும்பாலும் ஆவியாவதை தடுக்கவும் – மின்சார தயாரிப்பிற்கும் என்று இருமுனை திட்டமாக மாநிலம் முழுவதிலும் சூரிய ஒளி மின்சார திட்டத்தை அமல்படுத்தியது. சூரிய சக்தி மின்சாரத்தின் மூலம் மிகக் குறைந்த விலையில் குஜராத் மக்களுக்கு தடையில்லா மின்சாரமும் கிடைத்தது. அவர்களுக்கு மின் கட்டணம் ஒரு பொருட்டே அல்ல என்ற அளவில் இன்று வரை சுமூகநிலை தொடர்கிறது. இத்தனைக்கும் 2000 – 2001 இடைப்பட்ட குஜராத் கட்ச் பூகம்பத்தில் முழுவதுமாக உருக்குலைந்த மாநிலம் அது. ஆனால் தேர்ந்த நிர்வாகத்தில் வேகமாக மீண்டெழுந்தது.
தமிழகத்திலும் சூரிய ஒளி மின்சாரம் – காற்றாலை மின்சாரம் என்று வாய்ப்புகள் பல்வேறாக இருந்தாலும் அதை எல்லாம் முழுவதுமாக பயன்படுத்தவோ மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் இங்கு உள்ள அரசுக்கு மனமில்லை. ஒருபுறம் மின்தடை ஏற்படுத்தவும் அதற்கு காரணம் போதிய அளவில் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று மத்திய அரசை குறை கூறுவதற்கும் மின்சார அரசியல் பயன்படுகிறது. மறுபுறம் தனியாரிடமிருந்து மின்சார கொள்முதல் மின் கட்டண விகிதாச்சாரத்தில் நிர்வாக சீர்கேடு – அதன் மூலம் பலன் பெறும் ஊழல் பெருச்சாளிகள் இவற்றையெல்லாம் சரி செய்கிறேன் என்ற பெயரில் ஏதேனும் பெரிய திட்டத்தை தீட்டினால் அதில் ஒரு பெரும் கொள்ளை என்று எப்படி எல்லாம் மக்கள் பணத்தை வாரிசுருட்டலாம்? அரசாங்க பணத்தை எப்படி தங்களது பணமாக மாற்றிக் கொள்ளலாம் ? என்ற நிர்வாக சீர்கேடு
குஜராத் மக்கள் தங்களின் உழைப்பு – முயற்சி – தகுதி – திறமைக்கேற்ப உரிய வாய்ப்புகளை மட்டும் அரசு வழங்கினால் போதும். அத்தகைய நல்லரசு மட்டும்தான் நமக்குத் தேவை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதனால் அங்கு மாநில வளர்ச்சியும் மக்கள் நலனும் சார்ந்த அரசு சாத்தியமானது. தமிழக மக்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைக்க வேண்டும். எங்கும் எந்த தேர்வும் கட்டாயமாக இருக்கக் கூடாது. தகுதி தேர்வு – திறனாய்வு தேர்வு என்பதெல்லாம் அறவே கூடாது. மற்றபடி எது எப்படி போனாலும் அதைப்பற்றி கவலையில்லை என்ற அலட்சியமாக இருக்கும்போது அவர்களுக்காக அமையும் அரசு இப்படித்தான் இருக்கும். இப்படி இருந்தால் மட்டுமே தேர்தலில் சில நூறுகள் கிடைத்தால் மட்டுமே வாக்களிக்க தயாராக இருக்கும் மக்களுக்கு வாரி இறைல் வெற்றி பெறவும் அரசியலில் தங்கள் இருப்பை தக்க வைக்கவும் முடியும் என்ற துரதிஷ்டமான சூழல்.தொடரவே செய்யும்
இலவசம் – வாக்களிக்க பணம் – பரிசுப் பொருட்கள் – கூட்டம் கூட பிரியாணி குவாட்டர் என்று பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்து பதவிக்கு வந்தவர்கள். பல பேருக்கு கப்பம் கட்டி பதவியை தக்க வைப்பவர்கள் செலவு செய்யும் பணம் எதுவும் அவர்கள் சொந்தமாக அச்சடித்துக் கொள்வதில்லை . அதை ஏதோ ஒரு வகையில் அவர்கள் திருப்பி எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அவர்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும் . ஐந்து ஆண்டு காலம் முழுமையாக மக்கள் நல சேவையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
ஒரு புறம் இலவச மின்சாரம் மறுபுறம் அதீத கட்டணம் என்ற சீர்கேடு மாற வேண்டும் எனில் கோடிக் கணக்கில் நிலுவையில் இருக்கும் மின் கட்டணங்களை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஆடம்பர மின் பயன்பாடுகள் தவிர்த்து மின்சார சிக்கனம் கடைப் பிடிக்க வேண்டும். கூடுமான வரை அரசின் மானிய உதவிகள் மூலம் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட நிரந்தர தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை கூறும் மக்கள் முதலில் தங்களது தனிப்பட்ட எண்ணம் – செயல்பாடு – அரசுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது ? அது எந்த அளவுக்கு நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்கிறது ? என்பதையும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதை யோசித்து தங்களது தவறுகளை சரி செய்து பொறுப்பான குடிமக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தை கேள்வி கேட்கவும் குறை சொல்லவும் தகுதியிருக்கும்.
தமிழக மக்கள் இனிவரும் தேர்தல்களிலாவது வாக்களிக்க பணமும் பரிசு பொருட்களும் வேண்டாம் என்று நியாயமாக நேர்மையாக தேர்தலை எதிர் கொண்டால் மட்டுமே. ஆட்சியாளர்கள் பொதுமக்கள் பற்றி அவர்கள் இடர் பாடுகள் பற்றி அக்கறை செலுத்துவார்கள். அரசியல் கட்சிகளும் தேர்தல் என்று வந்தால் முதலில் பணம் – பரிசு – இலவச வாக்குறுதி என்று வாரி இறைத்து ஆட்சிக்கு வந்த பிறகு அதை பன்மடங்கு திருப்பி எடுக்கும் அறுவடை களமாக அரசியலை பார்க்கும் எண்ணம் மாறும். மக்கள் நலன் – பாதுகாப்பு – வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது.வந்தாலும் நீடிக்க முடியாது என்ற அச்சம் காரணமாக மக்களுக்கு மரியாதையுடன் கூடிய நல்ல நிர்வாகம் வழங்க தயாராவார்கள். பொது மக்கள்- அரசு , வாக்காளர் – அரசியல் கட்சி என்று இரண்டு தரப்பும் இணைந்து பொது நலனோடு சிந்தித்தால் மட்டுமே வரும் தலைமுறை வளம் பெறும் படியான நல்லாட்சி அமையும்.