விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் தங்கக்கட்டியை வெளியிட்டு அசத்தி இருக்கிறது இங்கிலாந்து.
இந்தியாவைப் பொறுத்தவரை, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் குறிப்பிடத்தக்கது விநாயகர் சதுர்த்தி. காரணம், ஹிந்துக்களின் முழு முதற் கடவுளாக கருதப்படுவது விநாயகப் பெருமான்தான். இதனால்தான், அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகர் சிலைகளை வைத்திருப்பார்கள். பக்தர்களும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டுத்தான், அதன் பிறகு இதர தெய்வங்களை வழிபடுவார்கள். ஆரம்பத்தில், வடமாநிலங்களில் மட்டுமே மிகவும் பிரபலமான பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென் மாநிலங்களிலும், குறிப்பாக, தமிழகத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள்தோறும் மட்டுமல்லாது வீதிகள்தோறும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி, ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல, தீபாவளி உள்ளிட்ட பெரும்பாலான ஹிந்து பண்டிகைகள் இங்கிலாந்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்க நாணயத்தை இங்கிலாந்தின் ராயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டது. இது ஒரு இங்கிலாந்து அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நிகழாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு, அதே ராயல் மின்ட் என்கிற நிறுவனம் விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் தங்கக் கட்டியை வெளியிட்டிருக்கிறது. 20 கிராம் எடை கொண்ட ஒரு தங்கக் கட்டியின் விலை 1,110.80 பவுண்டு என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த வாரத்தில் ஆன்லைனில் தொடங்கும் என ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேற்கண்ட லட்சுமி, விநாயகர் நாணயங்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியிலுள்ள சுவாமி நாராயணன் கோயிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா என்பவர் ஆலோசனைப்படி எம்மா நோபில் என்பவர் வடிவமைத்திருக்கிறார்.