எதிரிகளின் முகத்தில் கரி… பி.எஃப். வட்டி விகிதம் உயர்வு!

எதிரிகளின் முகத்தில் கரி… பி.எஃப். வட்டி விகிதம் உயர்வு!

Share it if you like it

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததால், பி.எஃப். நிறுவனம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாகவும், இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பணத்துக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று, எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பி வந்தனர். இந்த சூழலில், பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி எதிரிகளின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது பி.எஃப். நிறுவனம்.

அதானி குழுமம் வரவு செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. அதேபோல, பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலையை அதானி குழுமம் அதிகரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால், அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 28-வது இடத்துக்கு சரிந்தார். அவரது சொத்துமதிப்பில் பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, அதானி குழுமத்தில் இ.பி.எஃப்.ஓ. முதலீடு செய்திருந்த பணமும் இழப்பை சந்தித்திருப்பதாகவும், இதனால் தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்க்கட்சிகள் வதந்தியை கிளப்பி வந்தன. அதாவது, இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எஃப். சேமிப்பு பணத்தை நிர்வகித்து வரும் EPFO அமைப்பு, அத்தொகையில் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக, அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பணத்தை முதலீடு செய்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எஃப். பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்திருக்கிறது. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 8.1 சதவிகித வட்டியானது குறைக்கப்படும். தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படும் என்று வதந்தியை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. இதன் காரணமாக, தொழிலாளர்கள் பலரும் தங்களது வருங்கால வைப்புநிதி பணத்தை சரண்டர் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் புரளியை கிளப்பினர்.

இந்த சூழலில்தான், வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவிகிதத்தில் இருந்து 8.15 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது இ.பி.எஃப்.ஓ. நிர்வாகம். கடந்த 2 நாட்களாக நடந்த வருங்கால வைப்புநிதி அமைப்பின் கூட்டத்தில் வட்டி விகித உயர்வு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த வட்டி விகித உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. வட்டி விகித உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற ஆவணங்கள் அனுப்பப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் எதிரிகளின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.


Share it if you like it