தமிழகத்தில் முதல் முறையாக நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது சுவாமிகளுக்கு மிகவும் பிரமாண்டமாக சிலை வைப்பது பெருகிவருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரக்கவுண்டன்பாளையம் என்கிற இடத்தில் உலகிலேயே மிகவும் உயரமான முத்துமலை முருகன் கோயிலில் 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 6-ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த முத்துமுலை முருகன் கோயில் தற்போது பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து விடப்பட்டு, தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே காராப்பாடி-அணையப்பாளையம் சாலையில் அம்மன் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு நவ காளியம்மன் சொரூபமாக வீற்றிருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை ஒன்றும் இருக்கிறது. இதற்கடுத்து, நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிதாக கோபுரம் கட்டப்பட்டு, சன்னதியில் மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்குதான், தமிழகத்தில் முதல் முறையாக, 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் ஆனி மாதம் கும்பாபிஷேக விழா நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, திருப்பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், “தமிழகத்தில் முதல் முறையாக நவகாளி அம்மனுக்கு இங்குதான் 71 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்கள்.