ஈரோட்டில் சி.எஸ்.ஐ. அனுபவித்து வந்த 800 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஈரோட்டின் பிரதான பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே 800 கோடி ரூபாய் மதிப்பிலான 12.66 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஏலம் எடுத்த சி.எஸ்.ஐ. நிர்வாகம், அங்கு சர்ச், கல்விக் கூடங்கள், மருத்துவமனை மற்றும் விடுதிக் கூடங்கள் கட்டி இருக்கிறது. இதற்கான குத்தகைத் தொகையை சி.எஸ்.ஐ. நிர்வாகம் கட்டி வந்தது. இந்த சூழலில், மேற்கண்ட நிலத்தை தங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என்று 2010-ம் ஆண்டு சி.எஸ்.ஐ. நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அதன்படி, அப்போது ஈரோட்டில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் அலுவலராக பணிபுரிந்தவர் பட்டா போட்டுக் கொடுத்து விட்டார்.
ஆனால், இதற்கு ஈரோட்டில் சிறப்பு தாசில்தாராக இருந்தவர் எதிர்ப்புத் தெரிவித்து வருவாய் நிர்வாக அணையருக்கு மனு செய்து விசாரணைக்கு கோரினார். அப்போது, குறிப்பிட்ட அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று கூறப்பட்டது. அதாவது, இது தொடர்பாக அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசியிருக்கிறார் சிறப்பு தாசில்தார். அப்போது, தற்போதைய வழிகாட்டுதலின்படி 800 மதிப்பிலான அந்த நிலம், அரசுக்குச் சொந்தமானது. ஆகவே, அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிக்கை அனுப்பினார்.
இதனிடையே, அந்த இடத்தில் ரயில் நிலையம் வரை 80 அடி சாலை அமைக்கலாம் என்று ஈரோடு மாநகராட்சி மாஸ்டர் பிளான் 2-ல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் மேற்கண்ட இடத்துக்கு வெளியே அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில் பக்தர்கள் குழுவும், ஈரோடு மக்கள் நலன் நாடுவோர் சங்கமும் தங்களையும் இணைத்துக் கொண்டனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இவ்வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில்தான் நீதிபதி எம்.தண்டபாணி மேற்கண்ட இடம் அரசுக்குச் சொந்தமானது என்று உத்தரவிட்டிருக்கிறார். அதாவது, சி.எஸ்.ஐ. நிர்வாகம் கட்டடம் கட்டடம் கட்டி இருக்கும் இடத்தைத் தவிர, மற்ற அனைத்து இடங்களும் அரசுக்குச் சொந்தமானது என்றும், அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், மேற்படி நிலத்தை சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் இருந்து மீட்க, தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் உதவியாக இருக்க வேண்டும் என்றும் தனது தீரப்பில் குறிப்பிட்டருக்கிறார். இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளாக சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் சிக்கி இருந்த அரசு சொத்து மீட்கப்பட்டிருக்கிறது.