தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவரது கணவர் ஜெகதீசன். தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகதீசன், தனது மனைவியையும் அக்கட்சியில் சேர்த்துவிட்டார். 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றவர், மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். இதன் பிறகு, அரசியலில் சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி இல்லை. இந்த சூழலில், 2021 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்புக் கொடுத்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த சரஸ்வதியிடம் தோல்வியைத் தழுவினார். தனது தோல்விக்கு இவர்கள்தான் காரணம் என்று கட்சி நிர்வாகிகள் சிலரது பெயரை குறிப்பிட்டு, நடவடிக்கை எடுக்கும்படி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல, உள்ளாட்சித் தேர்தலிலும் அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர். இதுபற்றியும் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர், அரசியலிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அதேசமயம், அவரது கணவர் ஜெகதீசனோ, கட்சித் தலைமை மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். குறிப்பாக, 1993-ம் ஆண்டு கருணாநிதி ராணிப்பேட்டைக்குச் சென்றிருந்தபோது, அவரது வாகனத்தை அ.தி.மு.க.வினர் கொளுத்தினார்கள். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, இவர்களில் பலர் தற்போது தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார்.
அதேபோல, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பற்றிய “மாமனிதன் வைகோ” என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டு, வைகோவை புகழ்ந்து பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு, கருணாநிதி, ஸ்டாலின் குறித்து வைகோ பேசியதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார். மேலும், சமீபத்தில் நடந்த மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்தை, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இது கட்சித் தலைமைக்கும், லோக்கல் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும், கணவரின் இதுபோன்ற பதிவுகளுக்கு சுப்புலட்சுமி எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால், அவரது சம்மதத்துடன்தான் இவையெல்லாம் நடக்கிறது என்பதை கட்சித் தலைமை உணர்ந்ததால், அவர் மீது அதிருப்தியில் இருந்தது.
இந்த நிலையில்தான், தான் கட்சியிலிருந்து விலகுவதாக சுப்புலட்சமி ஜெகதீசன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2009-ல் எனது எம்பி. பதவி முடிந்ததும், நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், கட்சிப் பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து, 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் மக்கள் போற்றும் வகையில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த மன நிறைவோடு, நான் எனது நீண்டகால ஆசையை நிறைவேற்றி கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதற்கான கடிதத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து விட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பதவி விலகி இருப்பது அக்கட்சித் தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.