இந்தியாவை தாக்கும் எண்ணத்துடன் கண் சிமிட்டினால் கூட தக்க பதிலடி தரப்படும் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை !

இந்தியாவை தாக்கும் எண்ணத்துடன் கண் சிமிட்டினால் கூட தக்க பதிலடி தரப்படும் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை !

Share it if you like it

கிழக்கு லடாக்கின் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரு நாட்டு படைகளின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டாலும் முழுமையாக வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை.

இந்திய எல்லைப் பகுதியில்,ஒட்டுமொத்த படைகளும் திரும்பப்பெறப்பட வேண்டும். பதற்றம் தணிந்து அமைதி நிலை ஏற்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

போர் புரியத் தயார் நிலையில் எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும். அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல்அவசியம். நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நாம் எந்த நாட்டின்மீதும் தாக்குதல் நடத்தியதில்லை.

எந்தவொரு நாட்டின் நிலப்பரப்பில் ஓர் அங்குலத்தைகூட நாம் ஆக்கிரமித்ததில்லை. ஆனால், எவரேனும் நம்மை தாக்கும் எண்ணத்துடன் கண் சிமிட்டினால்கூட அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் நாம் இருக்கிறோம்.

இனி ஒருபோதும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் உரக்கச் சொல்லியது.

2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவை ஆட்சி புரிய தொடங்கியதிலிருந்து பாதுகாப்புத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டம் ஊக்குவிக்கப்பட்டு ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய அரசுகள் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுயசார்பு இந்தியா திட்டத்தை ராணுவத்தில் கொண்டுவந்தது எங்கள் அரசுதான். இவ்வாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.


Share it if you like it