திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. மாணவர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து வலம் வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விழாவின் 5-ம் நாளையொட்டி இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் பல்வேறு வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
6-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதன்பின் முக்கிய நிகழ்ச்சியாக 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதனையொட்டி நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதிஉலாவுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் வீதிஉலா தொடங்கியது.
முதலில் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முன்னே செல்ல தொடர்ந்து மற்ற நாயன்மார்களை மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். அப்போது பலத்த மழை பெய்ய தொடங்கியது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் கருமமே கண்ணாய் 63 நாயன்மார்களையும் பரவசத்தோடு ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த நிகழ்வினை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியினால் துள்ளி குதித்தனர்.