திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் – பிரதமரின் சாதனையா? சறுக்கலா?

திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் – பிரதமரின் சாதனையா? சறுக்கலா?

Share it if you like it

ஜூன் 5 2020 அன்று, அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, பின், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, செப்டம்பர் மாதம் 27, 2020 முதல் மூன்று வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன.

திரும்பப் பெறப்பட்ட 3 வேளாண் சட்டங்கள்:

1. விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020 – The Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm services ordinance, 2020

2. விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 – The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) ordinance, 2020

3.  அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 2020 (Essential Commodities Amendment) ordinance, 2020

சீக்கிய மக்கள் போற்றி வணங்கும் “குரு நானக் தேவ்” அவர்களின் பிறந்த நாளான, நவம்பர் 19, 2021 அன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இயற்றப் பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, திடீரென அறிவித்தது, இந்திய மக்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த காலங்களில் ஆதரவாக பேசிய கட்சிகள்:

திமுக

2016 ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தற்போதைய ஆளும் கட்சியான திமுக, அதன் தேர்தல் அறிக்கை, பக்கம் எண் – 23, வரிசை எண் –  24ல்,  “இடைத் தரகரின்றி, தங்களுடைய விளைப் பொருட்களை, விவசாயிகள், நேரடியாக விற்பனை செய்யும் வகையில், உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைப்பதற்கு, அரசும் – உற்பத்தியாளர்களும் இணைந்து, நிர்வகிக்கும் முறையை கொண்டு வருவோம்”, என வாக்கு உறுதி அளித்து இருந்தது.

ஆம் ஆத்மி

2017 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சி, அதன் தேர்தல் அறிக்கை, பக்கம் எண் – 14ல்,  “இடைத் தரகரின்றி, தங்களுடைய விளைப் பொருட்களை, விவசாயிகள், நேரடியாக விற்பனை செய்யும் நடைமுறையை கொண்டு வருவோம்”, எனக் கூறி இருந்தது.

காங்கிரஸ்

2017 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி, அதன் தேர்தல் அறிக்கை, பக்கம் எண் – 42, வரிசை எண் –  11ல்,  “இடைத் தரகரின்றி, தங்களுடைய விளைப் பொருட்களை, விவசாயிகள், நேரடியாக விற்பனை செய்யும் நடைமுறையை கொண்டு வருவோம்”, என வாக்கு உறுதி அளித்து இருந்தது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது,, காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் வாக்குறுதி, பக்கம் எண் – 9, வரிசை எண் – 11ல், “விவசாயிகள் தடைகள் இன்றி, உள் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும், தங்களுடைய விளைப் பொருட்களை, ஏற்றுமதி செய்யும் வகையில், வழி வகை செய்யப்படும்” என்று வாக்கு உறுதி அளித்து இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களுடைய தேர்தல் அறிக்கை, பக்கம் எண் – 16ல், “விவசாயிகளுக்கு ஏற்ற வகையில், சந்தைப்படுத்துதல் தொடர்பாக, நல்ல மாற்றங்களை கொண்டு வருவதாக”, உறுதி அளித்து இருந்தது.

இயற்றப்பட்ட, “விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின், 2020” மூலமாக, “விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, இந்தியா எங்கும் விற்றுக் கொள்ளலாம், அவர்கள் சார்ந்த (APMC – Agricultural Produce Market Committee) சந்தைகளில் மட்டும் விற்க தேவையில்லை” என விவசாயிகளுக்கு சுதந்திரம் தருகின்றது.

தற்போது, சட்டத்திற்கு எதிராக பேசும் காங்கிரஸ் கட்சி, 2012ல் APMC சந்தைகளை ஒழிப்போம் என்றது. 2013ல், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் APMC யை தவிர்க்கவும்” என்றது. மற்ற கட்சிகள் அளித்த தேர்தல் வாக்குறுதியை, மத்திய அரசு நடைமுறைப் படுத்தி, அதனை செயல்படுத்தியும் காட்டியது.

எனினும், தொடர் போராட்டங்களினாலும்,  அத்து மீறல்களினாலும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது, சிலருக்கு

மகிழ்ச்சியை தந்தாலும், பலருக்கு வேதனையும், அதிர்ச்சியும் தருகின்றது என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்:

இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும், நடைமுறைப் படுத்துவதில் இருந்து நிறுத்தி வைக்க, உச்சநீதிமன்றம் ஜனவரி 12, 2021 அன்று கருத்து தெரிவித்து இருந்தது. விவசாயிகளும் –  அரசாங்கமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், இந்த சட்டங்களை நிறுத்தி வைப்பதாக, SA பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆணை பிறப்பித்து இருந்தது.

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை வெறியாட்டம்:

வழக்கமாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நமது நாட்டின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அதில், நமது நாட்டில் இருக்கும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும், எல்லா வகையான பாதுகாப்பு உபகரணங்களும், உலக மக்களின் பார்வைக்கு தெரியும் வகையில், அணிவகுக்கப் பட்டு, ஊர்வலம் நடைபெறும். அந்த நாளில், உலகமே நமது நாட்டை உற்று கவனிக்கும். இந்த வருடம் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், ஒரு கரும்புள்ளி வைக்கப் பட்டது போல, அந்த நாளில், ஜனவரி 26 அன்று, விவசாயிகள் டெல்லியில் நடத்திய ஊர்வலத்தின் போது, பெரும் கலவரம் வெடித்து, விரும்பத் தகாத வன்முறை சம்பவங்கள் பல நடந்தேறின.

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, கலவரக்காரர்களால் கீழே இறக்கப் பட்டது, தேச பக்தர்கள் அனைவரையும், பெருந் துயரத்தில் ஆழ்த்தியது.

முன்னாள் முதல்வர் அளித்த அதிர்ச்சி தகவல்:

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங், சமீபத்தில் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தான் ஒன்பது வருடம் 6 மாதம் பஞ்சாப் மாநில முதல்வராகவும், மாநில உள்துறை அமைச்சராக இருந்ததாகவும், தற்போது நிறைய ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் மாநிலத்திற்குள் வருவதாகவும், இது பெரும் கலவரத்திற்கு பின்னணியாக அமையுமோ? என்ற அச்சம் ஏற்படுவதாகவும், தெரிவித்து இருந்தார்.

உச்சநீதிமன்றம் கூறியும் போராட்டத்தை நிறுத்தாத, விவசாயிகள் என்ற பெயரில் இயங்கி வரும் போராட்டக்காரர்கள், தற்போது பாரதப் பிரதமர் தானே முன்வந்து, சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தும், போராட்டத்தை நிறுத்தவில்லை. சட்டம் திரும்பப் பெற்ற பிறகும், தங்களுடைய போராட்டம் தொடர்ந்து செயல் படும் என அவர்கள் கூறியதன் மூலம், பல சந்தேகங்கள், பொது மக்கள் மனதில் எழுகின்றது.

போராட்டத்தை மாதக்கணக்கில் தொடர்ந்து வருவதன் மூலம், பிரிவினைவாதிகளின் பங்கு ஏதேனும் இருக்குமோ? என்ற சந்தேகத்தையும், சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். எப்படியாயினும், வன்முறையாளர்களுக்கு துணைப் போகாமல், நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்தால், மக்களின் நன்மதிப்பை, நிச்சயம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை..!

பாரதப் பிரதமர் கூறியது போல, “விவசாயிகளின் நன்மைக்காக, மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நமது நாட்டின் நன்மைகளை கவனத்தில் கொண்டு, தற்போது, அது திரும்பப் பெறப்பட்டு உள்ளது”. விவசாயிகளின் கோரிக்கையை, நாட்டின் நலனுக்காக நிறைவேற்றிய, பாரதப் பிரதமரின் சாதனையாகவே, மக்கள் இதனை கருதி வருவதாக, நடைபெற்று வரும் கருத்துக் கணிப்புகள், நமக்கு தெரிவிக்கின்றன.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்

    உழந்தும் உழவே தலை – திருக்குறள் (1031)

பொருள்:

உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும், உலகம் ஏரின் பின் தான் இயங்குகிறது. அதனால், எத்தனை வருத்தம் இருந்தாலும், உழவுத் தொழிலே முதன்மையானது.

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it