ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் சேர்வதற்காக, 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டன. இதில் முதல்கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியின் மகன் ஒருவரும் அகில இந்திய ரேங்க் 1 ஐப் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பெல்கெட்டைச் சேர்ந்தவர் நிர்மல் கஜாரே. விவசாயியான இவருடைய மகன்தான் நீல்கிருஷ்ணா கஜாரே. இவர்தான் தற்போது கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) முதன்மைத் தேர்வில் அகில இந்திய ரேங்க் 1 ஐப் பெற்றுள்ளார். நில்கிருஷ்ணா தனது ஆரம்பப் பள்ளியை அகோலாவில் உள்ள ராஜேஷ்வரிலும், கரஞ்சா லாடில் உள்ள ஜே.சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். ஷெகானில் உள்ள ஸ்ரீதியானேஷ்வர் மஸ்குஜி புருங்கலே அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடரும் அவர், “ஐஐடி பாம்பேயில் படிக்க விரும்புவதாகவும், விஞ்ஞானி ஆவதற்கு முயற்சி செய்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
நீல்கிருஷ்ணா எப்போது சிறந்த மாணவராக வலம் வந்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார். அவர், வில்வித்தையில் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார்.