தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சூசை பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவருக்கு – போன்ஸீட்டாள் என்பவருடன் திருமணமாகி அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் சேவியர், கடந்த 25.04.2023 அன்று மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர், 57 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் கொலை நடந்த 143 வது நாள் (15.09.2023) அன்று குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்டம் முதன்மை நீதிமன்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் கூறுகையில் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதுபற்றி அவர் பேசுகையில்,
“புதுக்கோட்டையில் இயங்கி வரும் பி.எஸ் பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்த என்னை, தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி., படிக்க வைத்தார் எனது தந்தை லூர்து பிரான்சிஸ். என்னை எப்படியாவது நீதிபதியாக பார்க்க வேண்டும் என்பதே அவரது பெரிய கனவாகவே இருந்தது. ஆனால், மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இருப்பினும் எனது தந்தையின் கனவை நனவாக்கும் வண்ணம், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னை போன்ற இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் படிக்க வேண்டும், படிப்பு ஒன்றுதான் நம்மை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும்.