Enemy Property Act
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களுடைய நாட்டில் உள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாட்டு மக்களின் சொத்துக்களை, பறிமுதல் செய்து, தனதாக்கிக் கொண்டனர். எதிரணி நாட்டைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், தங்கள் நாட்டில் இருந்தால், தனதாக்கி கொள்ளும் பழக்கம், அப்போது முதல் செயல் பட்டு வருகின்றது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தானில் குடியேறிய மக்களின் சொத்துக்கள், இந்திய நிலப் பரப்பில் எங்கேனும் இருந்தால், இந்திய அரசால், “எதிரி நாட்டு சொத்து பாதுகாப்பு சட்டம்” மூலம் கையகப் படுத்தப் படும். இந்த சட்டத்தின், மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற எதிரி நாடுகளில் குடியேறிவர்களின் சொத்துக்கள், நமது நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் அது, இந்திய அரசு கையகப் படுத்தி, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப, விற்கவோ அல்லது வேறு எதற்காவது பயன்படுத்தவோ முழு அதிகாரத்தை கொடுக்கும்.
எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், 1968 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. பின்னர், மத்திய அரசால், சில திருத்தங்களுடன் 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7 ஆம் தேதி அவசர சட்டமாக ஆணை பிறப்பிக்கப் பட்டது. பின்னர், மார்ச் 8, 2016 ஆம் ஆண்டு அன்று, நாடாளுமன்ற மக்களவையில் சட்டமாக நிறைவேறியது.
இந்த சட்டத்தின் மூலம், வெளிநாட்டு சொத்துக்கள், இந்தியாவில் எங்கு இருந்தாலும், அதை யார் பராமரித்து இருந்தாலும், தனிநபரோ அல்லது அரசுத் துறையாயினும், யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் இருந்து, அந்த சொத்தை பறிமுதல் செய்து, இந்திய அரசு ஏலம் மூலம் விற்பனை செய்யும். இந்திய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில், இந்த சட்டத் திருத்தம், மத்திய அரசால் மேற்கொள்ளப் பட்டது. அதுவே இந்த சட்டத் திருத்தத்தின் சிறப்பு அம்சமாகும்.
பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றவர்கள்:
பாகிஸ்தானில் குடியுரிமை பெற்ற 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலர், நமது நாட்டில், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை விட்டுச் சென்று உள்ளனர். அவற்றுள் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 4,991 சொத்துக்கள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் குடியுரிமை பெற்று, மேற்கு வங்காளத்தில் 2,735 நபர்களின் சொத்துக்களும், தில்லியில் 487 நபர்களின் சொத்துக்களும் இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
சீனாவில் குடியுரிமை பெற்றவர்கள்:
சீனா நாட்டில் குடியுரிமை பெற்று இருந்தாலும், 126 பேர் நமது நாட்டில் சொத்துக்கள் வைத்து இருப்பதாக கணக்கிடப் பட்டு உள்ளது. அவற்றுள், அதிகபட்சமாக மேகாலயாவில் 57 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 29 இடங்களிலும், அசாமில் 7 இடங்களிலும் சொத்துகள் உள்ளதாக கணக்கிடப் பட்டு உள்ளது.
1971 ஆம் ஆண்டு, அன்றைய பாகிஸ்தான் அரசாங்கம், இந்தியாவில் குடியுரிமை பெற்று, அந்த நாட்டில் சொத்துக்கள் வைத்து இருந்த இந்தியர்களின் சொத்தை விற்று விட்டது.
தமிழ்நாட்டில் எதிரி நாட்டு சொத்து:
சென்னையில் உயர்நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில், சுமார் ஆயிரத்து 300 சதுர அடியில், 3 மாடி கட்டிடம் உள்ளது. அங்கு “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைமை அலுவலகம் செயல் பட்டுக் கொண்டு வருகின்றது. அந்த இடம் பாகிஸ்தானை சேர்ந்த “துபா கலீல்” என்பவருக்கு சொந்தமானது.
நமது நாடு விடுதலை அடைந்த பின்னர், துபா கலீல் என்ற அந்த இடத்தின் உரிமையாளர் பாகிஸ்தானுக்கு சென்று குடியேறி விட்டார். அந்த இடத்தை பாபு இஸ்லாமியில் என்பவருக்கு “பவர்” எழுதிக் கொடுத்து உள்ளார்.
“பாபு இஸ்மாயில்” என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) என்ற இஸ்லாமிய அமைப்பின் அறக் கட்டளைக்கு 60 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு இருப்பதாக தகவல்கள் வந்து உள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மாநில தலைமை அலுவலகம் எதிரி நாட்டு சொத்து. அந்த இடமானது, அவர்களுக்கு சொந்தமான சொத்து என்பதற்கான, ஆதாரம் எதுவும் இல்லை.
அந்த இடத்தில், ஏற்கனவே இருந்த இடத்தை இடித்து, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” அமைப்பினர், தங்களது மாநில தலைமை அலுவலகம் கட்டி, செயல் பட்டும் வருகின்றனர். இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிய வந்ததும், த.நா.த.ஜ. செயல் படும் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்துக்களை பாதுகாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் என்ற தனிப் பிரிவு செயல்பட்டு வருகின்றது .
தங்களுக்கு சேராத சொத்தை, உரிமை கொண்டாடுவது மிகவும் தவறு. ஒரு வேளை அவர்களுக்கு சொந்தம் என, இஸ்லாமிய அமைப்பு நிரூபித்தால், நிச்சயமாக அரசாங்கம் அந்த இடத்தை, இஸ்லாமிய அமைப்புகளுக்கே கொடுத்து இருக்கும். ஆனால், அதை நிரூபிக்க முடியாமல் மற்றொரு சொத்தை அபகரிக்க முயலும் இஸ்லாமிய அமைப்புகள் தவறாக வழி நடத்தப் படுகின்றன, அவர்கள் தவறு செய்கிறார்கள் என, இஸ்லாமிய அன்பர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக யார் எந்த சொத்து வாங்கினாலும், அதை நல்ல வழக்கறிஞர்களிடம் கொடுத்து, அது சரியான பத்திரம் தானா? என்பதை அறிந்து, ஆராய்ந்து, பணம் கொடுத்து வாங்குவது தான் இயல்பு.
மிகப்பெரிய அமைப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இருக்கும் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்”, ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்னர் அது யாருடையது என, அறிந்து ஆராய்ந்து வாங்காதது ஏன்?
ஒருவேளை அவர்கள் ஏமாந்தார்களா? அல்லது நம்மை ஏமாற்றுகிறார்களா? என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என இஸ்லாமிய அன்பர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக மத்திய அரசுக்கு எதிராக, சில இஸ்லாமியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், அதிகமான அளவில் மசூதி உள்ளது. நமது நாட்டில், எல்லா மதத்தினரும் சமமாக கருதப் பட்டு, மதிக்கப் படுகின்றனர். எல்லா பள்ளி வாசல்களும், நல்ல படியாக நாடு முழுக்க பராமரிக்கப் பட்டு வருவதை, நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும், தங்களின் மீது உள்ள தவறை மறைக்க, அரசாங்கத்தின் மீதும், குறிப்பாக மத்திய பாஜக அரசு மீதும், பழி போடுவது மிகவும் தவறு என இஸ்லாமியர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைமை அலுவலகத்திற்கு எதிராகவே பள்ளி வாசல் உள்ளது. தலைமை அலுவலகத்தை தான் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளதே தவிர, பள்ளி வாசலை எதுவும் செய்யவில்லை. அது சரியான முறையில், வாங்கப் பட்டதால், அதை அரசாங்கம் கையகப் படுத்தவில்லை. ஆனால் எதிரி நாட்டு சொத்தை வைத்திருப்பதால் தான், தலைமை அலுவலகத்தை மத்திய அரசு கைப்பற்றி உள்ளது என்பதே உண்மை.
“ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்”, நிச்சயமாக அவர்கள் சட்டத்திற்கு முன் தண்டிக்கப் படுவார்கள் என்பதனை தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.
“தவறு செய்தவர் யாராயினும் தண்டிக்கப் பட வேண்டும்” என்பதே நியதி. ஆனால், இந்த விவகாரத்தில், தான் செய்த தவறை மறைக்க, மத்திய அரசு மீது தேவை இல்லாமல் பழி போடுவதும், மக்களின் மனதை குழப்புவதும், பதட்டத்தை ஏற்படுத்துவதும், மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதும், சிலருக்கு வாடிக்கை.
ஆனால், அதை கண்டும் காணாமல் இருப்பது நமக்கு வேடிக்கையாக இருக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
– அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai.