மன அழுத்தத்தை போக்கும் சோம்பு!

மன அழுத்தத்தை போக்கும் சோம்பு!

Share it if you like it

இந்திய மசாலா பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குவது சோம்பு. இது பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது. உணவிற்குப் பிறகு வாய் புத்துணர்ச்சிக்காக சோம்பு சாப்பிடுவார்கள். ஆனால், சோம்பு வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல, ஏராளமான உடல் நன்மைகளை கொண்டிருக்கிறது. இதனால்தான் சோம்பு உணவில் முக்கிய அங்கமாகக் இருக்கிறது. சோம்பின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.

சோம்பு ‘அபியேசியே’ குடும்பத்தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதிகளை தாயகமாகக் கொண்டது. சோம்பு, அதிமதுரம், அண்ணாசிப்பூ வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது. சோம்பு மருத்துவத்தில் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரமாகும். சோம்பு சேர்த்து சமைக்கும் உணவுகள் ஒரு வித நறுமணத்துடன் இருக்கும். ஒரு சிலருக்கு வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் உடல் நல பிரச்னைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால், அதிலுள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து, ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.

மேலும், மலட்டுத்தன்மை பிரச்னை உள்ள ஆண், பெண் இருவரும் மற்ற மருந்துகளை சாப்பிடும்போது, சிறிதளவு சோம்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கும். உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்புவை மென்று தின்றால் உடல் சூடு தணியும். வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணம், சோம்பில் உள்ள குளிர்ச்சித் தன்மைக்காகத்தான். குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால் உடனே சோம்பு கொடுங்கள். வயிறு களிமண் போல் கனமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ, வலி உடனடியாக சரியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோம்பை கொதிக்க வைத்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கும்.

உடல் அஜீரணத்தால் வாயு பிரச்னை ஏற்படும்போது, சோம்பை சிறிது சாப்பிட்டால் வயிற்றுக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால், வாயு பிரச்னை குணமாகும். கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோம்பை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கண் பார்வைக் கோளாறுகள் இல்லாதோரும் உட்கொள்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம். சோம்பு டீயை தினமும் குடித்து வந்தால், உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் ஜலதோஷம் வந்தால் சரியாக சுவாசிக்கக் கூட முடியாது, மிகவும் சிரமப்படுவோம். இதுபோன்ற சமயங்களில் இந்த சோம்பை சிறிது எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்னை உடனே சரியாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு, சில சமயங்களில் குறைந்து தேவையான அளவு கிடைக்காது. தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் சோம்பை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. சிலருக்கு கை கால்களில் உள்ள திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து நடக்கும்போதும், மற்ற வேலைகள் செய்யும்போதும் மிகுந்த துன்பத்தை கொடுக்கும். ஆகவே, நீர்கோர்த்துக் கொள்ளுதல் பிரச்னை உள்ளவர்கள், அவ்வப்போது சோம்பு சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும்.

ஆகவே, சோம்புவை தவறாமல் சமையலில் சேர்ப்போம்!


Share it if you like it