தியாகி ஆர். சிதம்பர பாரதி
(பிறப்பு : 05.06.1905 – நினைவு : 30.04.1987)
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைப் பட்டு, வட நாட்டுச் சிறைகளில், சுமார் 14 ஆண்டுகள் அடை பட்டுக் கிடந்த தியாகி தான், ஆர். சிதம்பர பாரதி.
பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப் பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு, 1957 தேர்தலில் மானா மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1905 ஜூன் 5 ஆம் தேதி, மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில், ரெங்கசாமி சேர்வைக்கும் – பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.
வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு, அவரது அடியொற்றி, இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார்.
சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில், இரண்டு ஆண்டுகள் இவர் இருந்து இருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார்.
பிரிட்டிஷ் அரசு பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப் பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கி விட்டு போலீசார் திரும்பி விட்டனர்.
அருகிலிருந்த கிராமத்து மக்கள், அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து, மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர், போலீஸ் அதிகாரி.
அவரைப் பழி வாங்குவதற்காக, மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து, திராவகம் வீசி, அவரை அலங்கோலப் படுத்தி விட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து மொத்தமாக, 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
சிறையிலிருந்து விடுதலை ஆன பின், தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்துக் கொண்டார். இவரது ஒரே மகள் சண்முகவல்லி.
சுதந்திரத்துக்குப் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு, 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவருடைய அரசியல் வாழ்க்கையில், எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக் கூட ஆளாகாமல், ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான ‘தாமிரப் பட்டயம்’ பெற்ற தியாகி இவர்.
மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில், 1987 ஏப்ரல் 30ல், தன்னுடைய 82வது வயதில் காலமானார்.