சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய விருப்பாச்சி கோபால் நாயக்கர்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய விருப்பாச்சி கோபால் நாயக்கர்

Share it if you like it

விருப்பாட்சி கோபால் நாயக்கர்

விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர், வெள்ளையருக்கு எதிராக புரட்சிப் படை நடத்தி, தலைக்கு விலை வைக்கப்பட்டு, பரங்கியரால் தூக்கிட்டுக் கொல்லப்பட்ட மாவீரர் ஆவார்.

மாவீரர் கோபால் நாயக்கருக்குப் பெற்றோர் வைத்த பெயர், “திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர்” என்பதாகும்.

விருப்பாட்சி மண்ணின் மைந்தராகிய கோபால் நாயக்கர், பத்தொன்பதாவது பாளையக்காரராக பதவியேற்று தன்னைப் போல் தன் சீமை மக்களையும் தன்மானம் மிகுந்த வீரர்களாக மாற்றினார்.

https://youtu.be/aTfMT4efSyA

நிஜாம் மன்னரிடம் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆற்காடு நவாபிடமிருந்து நாளடைவில் வரியை நிர்ணயிக்கவும், வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரே பெற்று, அடாவடியாக அதிகமான வரியை விதித்ததால், தங்கள் மண்ணையும் மக்களையும் காக்க, பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட முனைந்தனர்.  புலித்தேவன், தீரன் சின்னமலை, வீரன் அழகு முத்துக் கோன், கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்கள் வரி கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர். திண்டுக்கல் சீமைப் பாளையக்காரர்களை கோபால் நாயக்கர் ஒருங்கிணைந்து வலுவான புரட்சிக் கூட்டணியை உருவாக்கினார். 1799 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட்ட குழுவின் கூட்டணி அமைத்தால், வெற்றி தரும் எனக் கருதி, திண்டுக்கல் சீமை கோபால் நாயக்கர், கோவை பகுதி காளிஹான், மலபார் பகுதி கேரள வர்மா, கன்னட மராட்டியப் பகுதி துண்டாஜிவாக் என அமைத்த கூட்டணியின் தலைவர்கள் களத்தில் நின்று வென்றிட போர்க் கோலம் பூண்டனர். இந்த தீபகற்ப கூட்டமைப்பிற்கு, நாடெங்கிலும் ஆதரவு பெருகியது.

வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகு, பாஞ்சாலங்குறிச்சி சிறைக்குள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரையை, சிறைக்குள்ளே புகுந்து அதிரடிப் போர் நடத்தி மீட்ட மாவீரர் கோபால் நாயக்கர். விருப்பாட்சிக்கு வந்த ஊமைத் துரைக்கு விருதும்  6,000 படை வீரர்களையும் தந்து, மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக்கே மன்னராக்கினார் கோபால் நாயக்கர்.

கருமலை அடிவாரத்திலும், அங்கு உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலும், கோபால் நாயக்கரின் புரட்சிப் படையினர் மறைந்து வாழ்ந்தனர். கும்பினிப் படையினரை எதிர்த்து நடைபெற்ற கொரில்லா தாக்குதலுக்கு, கோபால் நாயக்கர் தான் காரணம் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்த திண்டுக்கல் கலெக்டர் பி.ஹர்டீஸ், அவர் மீது குற்றம் சுமத்தி, சம்மன் அனுப்பினார். ஆனால் கோபால் நாயக்கர், அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே 1799 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இரண்டாவது சம்மன் அனுப்பி, அவரைச் சரணடையுமாறு மிரட்டியது, ஆங்கிலேய அரசு. விருப்பாட்சிப் போருக்குப் பின்னும் நாயக்கரை கண்டுபிடிக்க முடியாததால், அவரது தலைக்கு 20,000 பணம் என ஆங்கிலேயர்கள் விலை வைத்தனர். கோபால் நாயக்கரை காட்டி கொடுத்தால் 20,000 பணம் தரப்படும் என பறைசாற்றினர். பணத்திற்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால், கோபால் நாயக்கர் காட்டிக் கொடுக்கப் பட்டார்.

04.05.1801 அன்று அவரைக் கைது செய்து, திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர், வெள்ளையர்கள். 05.09.1801 அன்று திண்டுக்கல் கோபால சமுத்திரம் என்று அழைக்கப் படக்கூடிய குளத்தின் அருகே, புளியமரத்தில் கோபால் நாயக்கர் தூக்கிலிடப் பட்டார். அதனாலேயே இந்த குளம் “கோபால் சமுத்திரம்” என்று அழைக்கப் படுகிறது. சாகும் போது கூட, கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட மாவீரனாக திகழ்ந்தார், கோபால் நாயக்கர்.


Share it if you like it