இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி இருக்கிறார்.
திருச்சி நேஷனல் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம் ஆகியவை இணைந்து, சுதந்திர அமுதப் பெருவிழா, பாரதியார் பிறந்த நாள் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200-வது பிறந்த தினம் ஆகிய முப்பெரும் விழாக்களை நடத்தின. விழாவில், இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் பலரும் பேசினர். இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, “நம் நாட்டில் சுதந்திர விடுதலைப் போர் என்பது மிகப்பெரிய இயக்கமாக இருந்தது. இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால், சுதந்திரப் போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் இப்போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். கிராமம் கிராமமாக இப்போராட்டம் நடந்திருக்கிறது. எனவே, சுதந்திரப் போராட்ட வரலாறு மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்கில் திருத்தி எழுத்தப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக போராடிய அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிந்தது.
நான் தமிழ்நாட்டின் கவர்னராக பொறுப்பேற்றபோது, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலைக் கேட்டேன். அப்போது, வெறும் 30 பேர் மட்டும் கொண்ட பட்டியலை கொடுத்தார்கள். அதன் பிறகு, நான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி கவனம் செலுத்தியபோது, 800-க்கும் மேற்பட்டோர் பெயர் தெரியவந்தது. நம் மனதில் இன்னும் காலனியாதிக்க சிந்தனை உள்ளது. அதனால்தான், ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்கிற எண்ணம் நம் மனதில் இன்னும் உள்ளது. ஆனால், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளை விட வளமானவை. அதை நாம் உணர வேண்டும்” என்றார். கவர்னர் ரவியின் இப்பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.