ஆபரேஷன் சப்ஸ் என்கிற பெயரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6 நாட்களாக நடத்திய ரெய்டில் 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 22 இடங்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்தது.
இச்சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 6 நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், நேற்றுடன் சோதனை நிறைவு பெற்றது. இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான அறிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடந்த ரெய்டில் 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதையும், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி ஸ்கொயர் ரெய்டு குறித்த விரிவான வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை கிளிக் செய்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்…