மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர்.
இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார்.
இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம்” என்று கூறினார்.