சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. போலீஸார் நடவடிக்கை எடுத்தும் புதுப்புது நபர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதில், சில பெண்களும் அடங்குவர்.
நேற்று முன்தினம் இரவு, பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கண்ணகி நகர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோர் கஞ்சா விற்கும் இடத்துக்குச் சென்றனர். குறுகிய தெருவுடன் இருட்டாக இருந்ததால் அவர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
துரத்திச் சென்று இருவரைப் பிடித்தபோது அவர்கள் போலீஸார் கையை தட்டிவிட்டுத் தப்பினர். தொடர்ந்து பிடிக்கத் துரத்திய போலீஸாரை கீழே கிடந்த கல்லால் தாக்கிவிட்டு, கஞ்சா வியாபாரிகள் தப்பி ஓடினர். காயமடைந்த போலீஸாரை ரோந்து போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
தப்பி ஓடிய கஞ்சா வியாபாரிகளை போலீஸார் தேடி வந்த நிலையில் பிரேம் (23), ராகுல் (22) சந்தோஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்த கண்ணகி நகர் போலீஸார் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.