புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் கிலோ கணக்கில் கஞ்சா இருப்பதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த தயாராக உள்ளதாக திருச்சியில் உள்ள நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அரசங்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில் மீமிசல் போலீசார் உதவியோடு சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இறால் பண்ணை ஒன்றில் படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்புள்ள 875 கிலோ கஞ்சா மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுல்தான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது திருச்சியில் போதைபொருள் பிடிபட்டுள்ளது.