பயணத்தை தொடங்காமலேயே… சொகுசு கப்பலின் சோக முடிவு!

பயணத்தை தொடங்காமலேயே… சொகுசு கப்பலின் சோக முடிவு!

Share it if you like it

சொகுசு கப்பலான ‘குளோபல் ட்ரீம் 2’ பயணத்தை தொடங்காமலேயே பழைய இரும்புக்கு விற்கப்படும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகிலேயே பிரபல சொகுசு கப்பலாக கருதப்படுவது ‘குளோபல் ட்ரீம்’. இந்த கப்பலுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து, இக்கப்பலை நிர்வகிக்கும் MV Werften நிறுவனம், ‘குளோபல் ட்ரீம் 2’ என்கிற மற்றொரு சொகுசு கப்பலை உருவாக்க முடிவு செய்தது. இதையடுத்து, 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கும் வகையில், குளோபல் ட்ரீம் 2 சொகுசுக் கப்பல் கட்டுமானப் பணியை 2019-ம் ஆண்டு துவங்கியது. பணியை துவக்கிய நிலையில், கொரோனா பரவல் தீவிரமாக இருக்கவே, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இந்நிறுவனம். இதனால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆகவே, திவால் அறிக்கையை பெற இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல், ஜெர்மனி நாட்டின் பால்டிக் கடற்கரையில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.

ஆனால், இந்த ‘குளோபல் ட்ரீம் 2’ சொகுசுக் கப்பலை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆகவே, கப்பலின் பாகங்களை விற்கும் நிலைக்கு MV Werften நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருக்கும் முக்கியமான விலையுயர்ந்த பொருட்களை தனித்தனியாக விற்க முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பிறகு, இறுதியாக கப்பல் இன்ஜின் ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் விஸ்மர் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பலை, அங்கிருந்து 2024-ம் ஆண்டுக்குள் முழுமையாக அகற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ட்ரீம் 2’ கப்பல், தனது பயணத்தை துவங்குவதற்கு முன்னரே, பாகங்கள் விற்கப்பட இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு, சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it