ஜி.டி.நாயுடு
(உள்நாட்டு மோட்டாரை உருவாக்கிய முதல் இந்திய விஞ்ஞானி)
ஜி.டி. நாயுடு (கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடு) (23 மார்ச் 1893 – 4 ஜனவரி 1974) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியியலாளர் ஆவார். “இந்தியாவின் எடிசன்” என்றும், குறிப்பிடப் படுகிறார். இந்தியாவில் முதல் மின்சார மோட்டாரை தயாரித்த பெருமை, இவரையே சாரும். அவரது பங்களிப்புகள் முதன்மையாக தொழில்துறையாக இருந்தன, ஆனால் மின்சாரம், இயந்திரவியல், விவசாயம் (கலப்பின சாகுபடி) மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் துறைகளிலும் பரவியது. அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பெற்றிருந்தாலும், பல்துறை மேதையாக சிறந்து விளங்கினார்.
ஜி.டி. நாயுடு, மார்ச் 23, 1893 அன்று தமிழ்நாடு, கோயம்புத்தூர், கலங்கல் என்ற இடத்தில், ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம், பள்ளியில் சிக்கலில் சிக்கியது. அவர் கல்வி கற்க பள்ளி செல்வதை விரும்பவில்லை மற்றும் வகுப்பின் போது ஆசிரியர்கள் மீது மணலை வீசும் பழக்கத்திற்காக அடிக்கடி தண்டிக்கப் பட்டார்.
நாயுடு, தான் பார்த்த ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கும் அளவுக்கு, பணத்தை சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கோவையில் உள்ள ஒரு உணவு விடுதியில், பணியாளனாக வேலை பெற்றார். வாகனத்தை வாங்கிய பிறகு, அவர் அதைக் கழற்றி மீண்டும் ஒன்றாக இணைப்பதில் நேரத்தைச் செலவிட்டார், பின்னர் இயந்திர வல்லுனர் ஆனார். அவர் 1920 இல் ஒரு ஆட்டோமொபைல் வாகனம் வாங்கி, தனது போக்குவரத்து வணிகத்தைத் தொடங்கினார். பொள்ளாச்சிக்கும் – பழனிக்கும் இடையே ஓட்டினார். சில ஆண்டுகளில், அவரது யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (U.M.S.), நாட்டிலேயே மிகவும் திறமையான பொதுப் போக்குவரத்து வாகனங்களை வைத்திருந்தது. 1937 ஆம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார், கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள ஜி.டி. நாயுடுவின் “நியூ” (NEW) (National Electic Works) (தேசிய மின்சாரப் பணிகள்) தொழிற்சாலையில் இருந்து, உருவாக்கப் பட்டது.
நாயுடுவின் ‘ரசந்த்’ ரேஸர் உலர் செல்கள் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய மோட்டார் இணைக்கப் பட்டது, இது ஜெர்மன் நகரமான ஹெய்ல்பிரான் என்ற தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்டது. அவரது மற்ற கண்டுபிடிப்புகளில் மிக மெல்லிய ஷேவிங் பிளேடுகள், ஃபிலிம் கேமராக்களுக்கான தூரத்தை சரி செய்யும் கருவி, பழச்சாறு பிரித்தெடுக்கும் கருவி, சேதமடையாத வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் மின் விசிறி ஆகியவை இருந்தன.
1941 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஐந்து வால்வு ரேடியோ பெட்டிகளை வெறும் ரூ.70/-க்கு தயாரிக்கும் திறன் தன்னிடம் இருப்பதாக அறிவித்தார். 1952 இல், இரண்டு இருக்கைகள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் கார் (வெறும் ரூ. 2,000/-) வெளி வந்தது. ஆனால், தேவையான உரிமம் வழங்க அரசு மறுத்ததால், உற்பத்தி நிறுத்தப் பட்டது. அவரது கண்டுபிடிப்பு இயந்திரங்களில் மட்டும் நின்றுவிடவில்லை. பருத்தி, சோளம், பப்பாளி போன்றவற்றில் புதிய ரகங்களை ஆராய்ந்து கண்டறிந்தார். அவரது பண்ணையை சர்.சி.வி.ராமன் மற்றும் விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் பார்வையிட்டனர். அஸ்திவாரம் போட்டதில் இருந்து முடியும் வரை 8 மணி நேரத்தில் ஒரு வீட்டைக் கட்டியுள்ளார்.
நாயுடு தனது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, வேலை வாய்ப்பை உருவாக்குவார்.
யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் ஃபேக்டரி, கோபால் க்ளாக் இண்டஸ்ட்ரி, கோயம்புத்தூர் டீசல் பொருட்கள் மற்றும் கோயம்புத்தூர் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர் ஆர்மேச்சர் வைண்டிங் ஒர்க்ஸ், யு.எம்.எஸ். ரேடியோ இண்டஸ்ட்ரி மற்றும் கார்பன் உற்பத்தித் தொழில் ஆகியவை, அவர் நிறுவிய சில தொழிற்சாலைகள்.
தனது புதுமையான யோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அறிவியலைப் பயன் படுத்துவதற்காக, ஜி.டி.நாயுடு அறியப் படுகிறார். தனது வீட்டின் நுழைவாயிலில், சுழலும் இரும்பு-கிரில்-கேட்டை அமைத்தார். சுழலும் கேட்டின் கிரில் கம்பிகளைச் சுழற்றி யாராவது கேட்டைத் திறக்கும் போதெல்லாம், வீட்டின் பின்புறம் கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு சிமெண்ட் தொட்டியில் சேமிக்கப்படுகிற வகையில் அமைக்கப் பட்டது. “ஆற்றலைப் பாதுகாப்பதற்கான கொள்கையின்” அடிப்படையில் அமைக்கப் பட்டது.
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதை, நாயுடு விரும்பினார். அங்கு புகழ்பெற்ற நபர்களின் படங்களை எடுப்பார். 1935 இல், லண்டன் மன்னர் ஜார்ஜ்ஜின் இறுதிச் சடங்கை படமெடுத்ததாக நம்பப் படுகிறது. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் படங்களையும் எடுத்தார்.
நாயுடு தனது வேர்களை மறந்து விடாமல், விவசாய நடவடிக்கைகளிலும், தீவிரமாக ஈடுபட்டார், மேலும் அவர் தினை மற்றும் பத்து அடி உயர பருத்தி செடிகளை வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
1944 ஆம் ஆண்டில், நாயுடு தனது ஆட்டோமொபைல் நிறுவனத்தில் தீவிர ஈடுபாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆராய்ச்சி உதவித் தொகைகளுக்கான மானியங்கள் மற்றும் அவரது ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் பட்டியலின பிரிவினருக்கான நலத்திட்டங்கள் உட்பட பல பரோபகார நடவடிக்கைகளை அறிவித்தார். 1945 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான, “ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக்” (தற்போது கோயம்புத்தூர் அரசு பாலிடெக்னிக் என்று அழைக்கப் படுகிறது) அமைப்பதில், நாயுடு முக்கியப் பங்கு வகித்தார்.
நாயுடு ஜனவரி 4, 1974 இல், இறைவனடி சேர்ந்தார். சர்.சி.வி. ராமன் நாயுடுவைப் பற்றி “ஒரு சிறந்த கல்வியாளர், பொறியியல் மற்றும் தொழில் துறையின் பல துறைகளில் தொழில் முனைவோர், தனது தோழர்கள் மீது அன்பு மற்றும் அவர்களின் பிரச்சனைகளில் அவர்களுக்கு உதவ விரும்பும் ஒரு அன்பான இதயம் கொண்டவர் என்று கூறினார்.
அவரது ஆரம்ப காலம் எளிமையானது, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற போதிலும், பெரிய கனவுகளைக் காண்பதற்கும் ஒவ்வொரு அடி வைப்பதிலும் ஆபத்துக்களை கண்டு பயப்படுவதில்லை. நாயுடு நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருப்பார்.
இளைஞர்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தி: “பள்ளியில் மட்டும் இல்லாமல், 25 ஆண்டுகள் கற்க வேண்டும், 25 ஆண்டுகள் சம்பாதித்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு கற்றுக் கொண்டதை, பிறர் நலனுக்காக செலவிட வேண்டும்.”
அருள் சிவசங்கரன்