கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டியதோடு, கான்வாய் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி திராவிடர் கழகத்தினருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் இருக்கிறது. இதன் 27-வது குருமகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர், இன்று ஞானரத யாத்திரை புறப்படுகிறார். இந்த நிகழ்வை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், ,அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 16 அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், திட்டமிட்டபடி இன்று காலை மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார் கவர்னர் ரவி.
தருமபுரம் ஆதினத்தை நோக்கி கவர்னரின் கான்வாய் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மயிலாடுதுறையில் சாலையின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கானோர் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியபோதும், திமிரிக் கொண்டு கவர்னரின் கான்வாய் மீது கருப்புக்கொடிகளையும், பதாகைகளையும், கற்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
தொடர்ந்து, தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு கவர்னர் ஆர். என். ரவி சென்றார். அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, எஸ்.பி. நிஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கபட்டது. தொடர்ந்து, கோயிலில் கஜபூஜை, கோ பூஜை செய்து வழிபடடார் கவர்னர். மேலும், விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்குச் சென்று சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். கவர்னர் வருகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக கவர்னரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,”தமிழக கவர்னர் சென்ற கார் மீது மயிலாடுதுறையில் இன்று கல்வீசி தாக்கி உள்ளார்கள். மாநிலத்தின் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணை கட்டிக்கொண்டு தனது கட்சி சித்தாந்தத்தோடு மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார்.
கவர்னர் மீது தி.மு.க. தொண்டர்கள் எதேச்சையாக தாக்குதல் நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளது. கவர்னருக்கு உயிருக்கு ஆபத்து என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முதலமைச்சர் இன்று மாலைக்குள் கவர்னரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். அநாகரீகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பா.ஜ.க. விரும்பவில்லை. கவர்னரின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கடிதம் எழுதப்போகிறோம். உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். டி.ஜி.பி. உயர் அதிகாரிகளிம் விளக்கம் கேட்க வேண்டும்.
இசைஞானி இளையராஜா யாரோ ஒரு மூன்றாவது மனிதர் எழுதிய புத்தகத்துக்கு தனது சொந்த கருத்தை முன்னுரையாக எழுதி இருக்கிறார். இதற்கு ஏன் கோபம் அடைய வேண்டும். அவரது இசை உலகம் உலகைவிட பெரியது. பதவிக்காக என்று குறுகிய வட்டத்துக்குள் அடக்க முடியுமா? அவருக்கு பதவி என்றால் உச்சபட்சமாக பாரத ரத்னா விருது கொடுப்பதாகத்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.