காம்ரேடுகளின் திருட்டுத்தனம்: சு.வெங்கடேசன் எம்.பி.க்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பதிலடி!

காம்ரேடுகளின் திருட்டுத்தனம்: சு.வெங்கடேசன் எம்.பி.க்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பதிலடி!

Share it if you like it

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டு ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. கூறிவரும் நிலையில், திராவிடம் என்பதே இல்லை என்று கூறினார் கவர்னர். இந்த சூழலில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களை கவுரவிக்கும் வகையிலான நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், தமிழ்நாடு என்றால் பிரிவினை பேசுவதுபோல இருப்பதால் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார். இது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, தமிழகம் அல்ல தமிழ்நாடு என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கினர்.

அதேசமயம், திராவிட நாடு என்று கூவிக்கொண்டிருந்த தி.மு.க. அண்கோ கம்பெனியை தமிழ்நாடு என்று கூறவைத்த பெருமை கவர்னரையே சாரும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் கிண்டல் செய்தனர். இது தி.மு.க.வினரை ரொம்பவே அப்செட்டாக்கி விட்டது. இந்த சூழலில், நிகழாண்டுக்கான தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஏற்கெனவே கவர்னர் மீது அதிருப்தி பிளஸ் ஆத்திரத்தில் இருந்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், கவர்னர் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், கவர்னர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம்தான் தற்போது தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கவர்னர் மாளிகையில் வரும் 12-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. ஆகவே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பிதழில், தமிழ்நாடு ஆளுனர் என்று குறிப்பிடாமல் தமிழக ஆளுனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கடந்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து தொடர்பான அழைப்பிதழையும், தற்போதுதைய பொங்கல் விழா தொடர்பான அழைப்பிதழையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அன்று தமிழ்நாடு என்றும், இன்று தமிழகம் என்றும் அச்சிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும், சட்டமன்றத்திலிருந்து கோவத்துடன் வெளியேறிய கவர்னர், இதே கோவத்தில் தமிழகத்திலிருந்தும் வெளியேறுவாரா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குத்தான் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அப்பதிவில், தமிழக ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழ், தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சாகி இருக்கிறது. இதில், தமிழ் அழைப்பிதழில் தமிழகம் என்று சுட்டிக்காட்டி இருக்கும் எம்.பி. சு.வெங்கடேசன், ஆங்கில அழைப்பிதழில் கவர்னர் ஆஃப் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டிருப்பதை வசதியாக மறைத்தது ஏன்? திராவிட மாடல் ஆட்சி என்பதால் காம்ரேடுகளுக்கும் திருட்டுத்தனம் அதிகமாகிவிட்டது. ‘உண்மையை மறைப்பவர்கள் தோழர்கள்’ என்பதற்கான இன்னொரு உதாரணம் இது!” என்று குறிப்பிட்டு குட்டு வைத்திருக்கிறார்.

இவரது இந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it