சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜோதி என்ற 32 வயது பெண் இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் இருக்கும் ராஜீவ் காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்காக ஆஞ்சியோ என்னும் அடைப்பு அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு அவரது வலது கையில் வீக்கம் ஏற்பட்டது . இருதய நோய் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களே அதற்கு சிகிச்சை மேற்கொண்டார்கள். அது பலன் அளிக்காமல் அவரது கால்களிலும் வீக்கம் ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் அவரது உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக அந்தப் பெண்ணின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவமனையில் அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கணவர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே ஜோதியின் ஒரு கை அகற்றப்பட்டது என்று மருத்துவமனை மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடலியல் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மருத்துவங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த மருத்துவ நிர்வாகம் மேலதிக ஆய்வுக்காக புது தில்லியில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது .அதில் அந்தப் பெண்ணிற்கு அபூர்வமாக இருக்கும் ரத்த உறைதல் நோய் இருந்ததால் தான் கைகள் வீங்கியதாக அறிக்கை தரப்பட்டுள்ளது. கை மற்றும் கால்களில் அடுத்தடுத்த வீக்கம் ஏற்பட்டதால் உயிர் காக்க வேண்டியே கை அகற்றப்பட வேண்டி வந்ததாகவும் கைகள் அகற்றப்பட்டதால் தான் உயிர் பாதுகாக்கப்பட்டது. அதுவும் அவரது கணவருக்கு முறையாக எடுத்துரைக்கப்பட்டு அவரது அனுமதியின் பேரிலேயே கை அகற்றப்பட்டது என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு நிபுணர் மனோகர் தெரிவித்திருக்கிறார்.
அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை அலட்சியம் காரணமாக பெண்ணிற்கு கை அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இது அரசு மருத்துவமனைகளை கொச்சைப்படுத்தும் மருத்துவர்கள் சேவையை அவமதிக்கும் வகையிலான குற்றச்சாட்டு . அந்த பெண்ணிற்கு ரத்த உறைதல் என்னும் அபூர்வ நோய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது . அந்த நோய் காரணமாகவே அவரது வலது கை மற்றும் கால்களில் தொடர்ந்து வீக்கம் ஏற்பட்டது . அவரது உயிரை காப்பாற்ற வேண்டி தான் கை அகற்றப்பட்டது. இதற்கு உரிய ஆய்வுகள் ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஆவணமாக இருக்கிறது. இவையாவும் அந்தப் பெண்ணின் கணவர் ஒப்புதலோடு தான் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறது. எனவே தவறான சிகிச்சை மருத்துவத்துறையில் அலட்சியம் என்று யாரும் அரசு மருத்துவமனைகளை கொச்சைப்படுத்த வேண்டாம்.
வேண்டுமானால் முன்னாள் முதல்வர் எடப்பாடி அவரது ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் கூட வந்து ஆய்வு செய்து கொள்ளட்டும். அலட்சியம் நிகழ்ந்ததாக நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். மேலும் அரசு மருத்துவமனையின் சிகிச்சையிலோ அல்லது மருத்துவத்திலோ உங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் . அதற்கு தேவையான செலவுகளை மருத்துவ காப்பீட்டின் மூலம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்ற வாக்குறுதியையும் அந்த பெண்ணின் கணவருக்கு நாங்கள் ஏற்கனவே வழங்கி இருக்கிறோம் . அவர் மனைவியின் கை அகற்றப்பட்ட ஆதங்கத்தில் குற்றச்சாட்டு வைத்ததாகத்தான் அவரே ஒப்புக்கொள்கிறார். எனவே இந்த விவகாரத்தை மேற்கொண்டு அரசியலாக வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று இந்தப் பெண்ணின் விவகாரத்தில் அபூர்வ ரத்த உறைதல் நோய் காரணமாகத்தான் அந்தப் பெண்ணுக்கு கை அகற்றப்பட்டது என்று அவரே குறிப்பிடுகிறார். ஒரு சாதாரண அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்ட நோயாளியின் முழு உடலியல் அவர்களின் பரம்பரை நோய் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும். குறிப்பாக ரத்த அழுத்தம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு எல்லாம் பலமுறை பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இருதய நோய் மூளை சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் என்றால் இந்த நடைமுறைகளோடு இன்னும் கூடுதல் ஆய்வுகள் நடைமுறைகள் பின்பற்றப்படும். அவை அனைத்தும் பலமுறை ஆய்வு செய்யப்படும். பல மருத்துவர்களின் பரிந்துரை ஆலோசனைகள் பெறப்படும் .அதன் பிறகு தான் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை தயாராகும் .
அந்த அடிப்படையில் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக சொல்லப்படும் அந்த பெண்ணிற்கு சிகிச்சை எடுப்பதற்கு முன்பாக ரத்த நாளங்களில் அடைப்பை அகற்றும் ஆஞ்சியோ சர்ஜரி என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பாக அந்த பெண்ணிற்கு இருக்கும் நோய்கள் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றிய பரிசோதனைகளை ரத்த மாதிரிகள் கொண்டு முதலில் செய்திருக்க வேண்டும் .லட்சத்தில் ஒருவருக்கு கோடியில் ஒருவருக்கு இருப்பது என்பதெல்லாம் இரண்டாம் விஷயம். இப்படி ஒரு நோய் இருக்கிறது . அந்த நோய் இருந்தால் இதில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் அறிகுறி உண்டு என்பது மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நிச்சயமாக அந்த ஆய்வை மேற்கொண்டு இருக்க வேண்டும் . அப்படி உரிய ஆய்வை மேற்கொண்டு அறுவை சிகிச்சைக்கு தயாராகி இருந்தால் இன்று அந்த பெண்ணின் கை அகற்றப்பட வேண்டிய துரதிஷ்டம் வந்திருக்காது . அந்த வகையில் இது முழுக்க முழுக்க மருத்துவமனையின் அலட்சியம் சுகாதாரத் துறையின் அலட்சியம் என்பது தெளிவாகிறது.
ஆனால் எந்த விசாரணைக்கும் எந்த ஒரு மருத்துவ ஆய்வுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களிடம் அறிக்கை இருக்கிறது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். அதே அமைச்சர் தான் அரிதிலும் அரிதாக லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் இந்த ரத்த உறைதல் நோய் பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் அதை தடுக்கவும் அதற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தேவையான உபகரணங்களை வாங்கவும் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிடுகிறார் . அப்படி எனில் அந்த ரத்த உறைதல் நோய் சிகிச்சைக்கு தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் சிகிச்சைகளை தருவதற்குமான உபகரணங்கள் ஆய்வக உபகரணங்கள் தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். 10 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ரத்த உறைதல் என்னும் நோய் அபூர்வமாக இருந்தாலும் அது ஒரு உயிர் கொல்லி நோயே. அப்படிப்பட்ட ஒரு நோயை கண்டறிவதற்கும் ஆய்வு செய்வதற்கும் அதன் மாதிரிகளை வைத்து சிகிச்சை மேற்கொள்வதற்கும் தேவையான உபகரணங்கள் மாநிலத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக இருக்கும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே இல்லை என்பதன் மூலம் தமிழக அரசின் அரசு மருத்துவமனைகளில் உண்மை நிலை எப்படி இருக்கிறது? என்ற உண்மை அம்பலம் ஆகிறது.
கொரோனா போன்ற காலகட்டத்தில் எவ்வளவோ உள்கட்டமைப்புகள் சிகிச்சை முறைகளை தனியார் மருத்துவமனைகளை மேற்கொண்டது . அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆய்வக உபகரணங்கள் என்று எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் தர தயாராக இருந்தது. மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது? மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கும் தேவையான எத்தனையோ நிதி ஒதுக்கீடுகளையும் செய்து வருகிறது. ஆனால் இது எதையுமே பயன்படுத்தி மாநில அரசு மருத்துவமனைகளில் தரத்தை உயர்த்தவோ அங்கு முறையான நிர்வாகத்தை கட்டுப்பாடுகளை முடுக்கி விட்டு அரசு மருத்துவமனையை நம்பி வரும் சாமானிய மக்களின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் உத்திரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கரையோ மாநில அரசுக்கு இல்லை. இதையெல்லாம் முன் நின்று ஆய்வு செய்து அனைத்தையும் சரி செய்ய வேண்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் . யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளுங்கள். எங்களின் மீது எந்த தவறும் இல்லை என்று ஆணவமாக பேசுவதும் பொறுப்பை தட்டி கழிப்பதும் அழகல்ல.
கடந்த ஆண்டு இதே சென்னையைச் சேர்ந்த 12 வயது ஒரு பெண் குழந்தை கால்பந்தாட்டத்தில் பெரிய அளவில் எதிர்காலத்தில் சாதித்து மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பெருமை தேடி தரும் எல்லா தகுதியோடும் இருந்த ஒரு கால்பந்தாட்ட வீராங்கனை. தனது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக கால்பந்தாட்டத்தின் போது ஏற்பட்ட ஒரு காயத்திற்காக சிகிச்சைக்காக இதே சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மேற்கொண்ட சிகிச்சைகளில் அவரது அறுவை சிகிச்சைக்கு பிறகு அடுத்தடுத்த உபாதைகள் நேரிட்டு அதன் மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. அதன் பிறகு மேற்கொண்ட சிகிச்சையிலும் அந்தப் பெண் குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது. 12 வயதில் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று மாநில அளவில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்த பெண் குழந்தை. எதிர்காலத்தில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் எத்தனையோ சாதனைகள் படைக்க தயாராக இருந்த ஒரு பெண் குழந்தை இதே அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்த சிகிச்சையால் மரணம் அடைந்து சவமாக வீடு போனது.
ஆனால் அந்த விவகாரத்தில் மருத்துவ ஆய்வுகள் மருத்துவ ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தவும் அது சம்பந்தமான ஆய்வுகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் உரிய விளக்கமும் பதிலோ தரவே இல்லை . மாறாக மருத்துவத் துறையில் எந்த தவறும் இல்லை. எல்லா சிகிச்சையும் சரியாகத்தான் நடந்தது. அந்த குழந்தையின் பெற்றோரின் அனுமதியோடு நடந்தது. யாருடைய குற்றச்சாட்டை பற்றியும் கவலை இல்லை என்று அலட்சியமாகவே கடந்து போனார் . இந்த ஆண்டு வரை எத்தனையோ மரணங்கள் மருத்துவ இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இன்னமும் மாநில அமைச்சரின் பதில்களும் விளக்கமும் மட்டும் மாறாமல் அரசு மருத்துவத் துறையிலோ நிர்வாகத்திலோ எந்த தவறும் இல்லை. நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராகிறோம் என்று அதே பதிலை தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
இதன் மூலம். தமிழக அரசின் அரசு மருத்துவமனைகள் சாமான்ய மக்களின் மருத்துவ சிகிச்சைக் கோ அல்லது அவர்களின் ஆரோக்கியத்தை உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ செயல்படவில்லை. அவர்களை வழிநடத்தும் மாநில அரசும் அதைப்பற்றி அவர்களுக்கு வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. தனியார் மருத்துவமனைகளை நம்பி போனால் சாதாரண விஷயங்களுக்கு கூட பல லட்சங்கள் செலவழிக்க வேண்டி இருக்கும் . எந்த ஒரு மருத்துவ ஆய்வு முடிவுகள் ஆய்வகம் முடிவுகளையும் கேட்டுப் பெற முடியாது. உயிரிழப்புக்கள் நேரிடும் பட்சத்தில் நீதியும் பெற முடியாது. மேலும் பெரும் பொருளாதார சுமை காரணமாக பல கோடி மக்கள் அந்த தனியார் மருத்துவமனைகளில் உள்நுழையவே அஞ்சும் தயங்கியும் தான் அரசு மருத்துவமனைகளை நோக்கி வருகிறார்கள்.
ஆனால் வேறு எந்த வழியும் இல்லாமல் தங்களை மட்டுமே நம்பி வரும் சாமானிய மக்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள். அவர்களை அலட்சியமாக கையாள்வதும் அவர்களின் உயிர் ஆரோக்கியம் பற்றி குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் சிகிச்சைகளை மேற்கொள்வதும் வேதனை. மேலும் தவறுகள் நடைபெற்ற பிறகும் உறுப்புக்கள் அகற்றம் உயிரிழப்பு என்று தொடர்ச்சியாக சாமானிய மக்களின் இழப்புகள் தொடரும்போது கூட உரிய நடவடிக்கை எடுக்கவோ அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தயாராக இல்லாத மாநில சுகாதாரத்துறை அமைச்சர். அரசு மருத்துவரையும் அவர்களின் அலட்சியத்தையும் மூடி மறைக்கும் விதமாக எந்த ஆய்வுக்கும் தயாராக இருக்கிறோம். எந்த விசாரணைக்கும் வழக்குக்கும் கூட தயாராக இருக்கிறோம் என்று அலட்சியமாக பேசுவது நம் கைகளில் அதிகாரம் இருக்கிறது. ஆட்சி நம் கைகளில் இருக்கிறது. காவல்துறை ஊடகங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதையெல்லாம் மீறி நம்மை யார் என்ன செய்து விட முடியும்? என்ற ஆணவமும் அலட்சியமும் தவிர வேறில்லை . மக்களால் மக்கள் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் இந்த ஆணவப் போக்கும் அகம்பாவமும் அழகல்ல . சாமானிய மக்களின் கண்ணீரும் அவர்களின் துயரமும் சரித்துப் போட்ட சாம்ராஜ்யங்கள் ஏராளம் உண்டு . அதை சமகாலத்து தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது.